பக்கம்:மதன கல்யாணி-2.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 மதன கல்யாணி

அதைக் கேட்ட துரைராஜா முன்னிலும் அதிகரித்த வியப்பும் அருவருப்பும் அடைந்து, “அப்படியா அது என்னால் ஏற்பட்ட விபத்தா? உங்களால் ஏற்பட்டதல்லவா? எங்கே? நீங்கள் என்னுடைய முகத்தைப் பார்த்துப் பேசுங்கள். அவனுக்கு ஏற்பட்டதை நீங்கள் விபத்தாக எண்ணி வருத்தப்படுகிறீர்களா அல்லது, அதைக் குறித்து சந்தோஷப்படுகிறீர்களா என்பதை கூசாமல் சொல்ல முடியுமா?” என்றான்.

கல்யாணியம்மாள், “ஒரு மனிதனை அக்கிரமமாகச் சுட்டு, அவனுடைய உயிருக்கு ஹானி தேடுவதைப் பற்றி, யாராவது சந்தோஷப்படுவார்களா? அந்தக் காரியத்தைச் செய்தவனாகிய நீ ஒருவன் மாத்திரம் அதைப்பற்றி சந்தோஷப்படுகிறாய் போலிருக் கிறது! நீ இப்படி எல்லாம் தாறுமாறாகப் பேசிக் கொண்டு திரிந்தால், போலீசார் உன்னைப் பிடித்து வீண் உபத்திரவங் களுக்கு ஆளாக்குவார்கள்” என்றாள்.

அதைக் கேட்ட துரைராஜா தனது சட்டைப் பைக்குள் கையை விட்டு, அதற்குள் கிடந்த வைரப் பதக்கத்தை எடுத்துக்காட்டிய வண்ணம், “என்னைப் போலீசார் பிடித்துக் கொள்வதிருக்கட்டும்; நான் தாறுமாறாகப் பேசுகிறேன் என்று சொல்லுகிறீர்களே; எங்கே, நீங்கள் தாறுமாறாகப் பேசாமல் ஒழுங்காகப் பேசுங்கள் பார்க்கலாம். இதோ இந்த வைரப்பதக்கம் இருக்கின்றதே. இதை நீங்கள் எப்போதாவது பார்த்ததுண்டா?” என்று புரளியாகக் கண் சிமிட்டிப் பேசினான். அவனது கையில் இருந்த வைரப் பதக்கத்தை அலட்சியமாகப் பார்த்த கல்யாணியம்மாளது முகம் கோபத்தினால் கருத்தது; கண்கள் சிவந்தன; அந்த அம்மாள் முறுக்காக நிமிர்ந்து அவனைப் பார்த்து, “என்ன இதெல்லாம்: எவ்வளவோ அவசரமான என்னுடைய ஜோலிகளைக் கெடுத்துக் கொண்டு, நான் இப்போது பேசுகிறேன் என்பதை உணராமல் நீ என்னோடு விளையாடுகிறாயே! ஏதோ ஒரு பதக்கத்தை வைத்துக் கொண்டு, அதை நான் பார்த்ததுண்டா என்று கேட்கிறாயே! ஊரில் உள்ள ஒவ்வொருவரும் என்னென்ன நகைகள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் போய்ப் பார்த்துவிட்டா வந்திருக்கிறேன்? இதை நான் பார்த்திருந்தால் என்ன? பார்க்காதிருந்தால் என்ன? இதென்ன கருட சேவையா?” என்று அதட்டிப் பேசினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/212&oldid=646017" இலிருந்து மீள்விக்கப்பட்டது