பக்கம்:மதன கல்யாணி-2.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 21

அவனை நசுக்கிவிடலாம் என்று நினைத்து நீங்கள் இறுமாப்புக் கொள்ள வேண்டாம். அந்தப் பையனுக்கு பந்துக்களும் சிநேகிதர்களும் எவருமில்லை என்று நினைத்து மனப்பால் குடிக்க வேண்டாம். நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு ஆயிரத்துக்கும் நான் ஒன்பதாயிரம் வீதம் செலவழிக்கக் கூடியவன்; யாருடைய கை மேலென்று பார்க்கலாம்; பல பங்களாக்களில் நீங்கள் போய் அவனுடைய நடத்தையைப் பற்றி அவதூறாகப் பேசிய விஷயத்தில், நாங்கள் நியாயஸ்தலத்தில் உங்கள் மேல் பிராது கொடுக்கிறோம். உங்களுடைய பெண்களையும் சாட்சிகளாகப் போடுகிறோம். அவர்களுக்கு அவனுடைய நடத்தை எப்படிப் பட்டதென்பது தெரியும். உங்களுடைய யோக்கியதையைப் பற்றி சந்தி சிரிக்கும் போது நீங்கள் இப்போது அடைவதைவிட அதிகமான ஆனந்தம் அடைவீர்கள்” என்று மேலும் ஏதோ பேச ஆரம்பிக்க, அதைக் கண்ட கல்யாணியம்மாள், காரியம் அவ்வளவு விபரீதமான நிலைமைக்கு வந்த பிறகு, துணிந்து வாயடியடித்து, அவரை அனுப்பி விடுவதே நல்லதென்று நினைத்தவளாய்த் தனது ஆசனத்தை விட்டு முறுக்காக எழுந்து, “சரி, சரி. அப்படியே செய்யலாம். நீர் சரியான ஆண்பிள்ளையாய் இருந்தால் உடனே போய் பிராதைக் கொடுத்துவிட்டு மறுவேலை பார்க்க வேண்டும். யாருடைய நடத்தை தவறானதென்பதை அவ்விடத்தில் நான் நன்றாக மெய்ப்பிக்கிறேன். நீர் போகலாம்; இங்கே இருக்க வேண்டாம்” என்று கூறினாள். -

உடனே வாசலை நோக்கி இரண்டோரடி நடந்த கிழவர் திரும்பிப் பார்த்து, “அம்மணி கடைசியாக ஒரே ஒரு வார்த்தை சொல்லி விடுகிறேன். நியாயஸ்தலத்தில் உங்களுடைய சாமர்த்தியத்தைக் கொண்டு நீங்கள் வென்று கொள்ளுங்கள்; ஆனால், உங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் வயது வந்து பெருத்த பெண்பிள்ளைகளைப் போல இருக்கிறார்கள். அவர்களைத் தக்க இடத்தில் நீங்கள் கலியாணம் செய்து கொடுக்க வேண்டிய சமயம் இது. அவர்கள், தங்கள் தாயினுடைய நடத்தை இப்படிப்பட்டதென்பதைத் தெரிந்து கொள்வார்களானால், அது அவர்களுடைய நல்ல நடத்தையைக் கெடுக்கக்கூடிய ஒரு கெட்ட உதாரணமாக அல்லவா முடியும். தவிர, நியாயஸ்தலம் வரையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/25&oldid=646091" இலிருந்து மீள்விக்கப்பட்டது