பக்கம்:மதன கல்யாணி-2.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 மதன கல்யாணி

புரத்திலேயே அவளையும் சயனிக்க வைத்துக் கொண்டு அந்த இரவைப் போக்கினாள் ஆனாலும், அவள் தனது இமைகளை மூடாமலே வதைபட்டுக் கிடந்தாள். தனது மூத்த புத்திரியின் துர்க்குணங்களும் துர்நடத்தையும் கோமளவல்லிக்குப் பழகாமல் இருக்க வேண்டுமே என்ற கவலையும் அச்சமுமே பெரிதாக வருத்தின. துரைஸானியம்மாள் மோகனரங்கனிடத்தில் வைத்துக் கொண்ட துர்நடத்தையைக் கண்டு, தான் அவளைச் சிறை வைத்ததை மறைத்து, அவளுக்குக் கடுமையான தலைவலியாய் இருப்பது பற்றி, அவள் தனியாக இருப்பது நலம் என எண்ணியே அவ்வாறு செய்ததாகச் சொல்லி வைத்திருந்தாள். கோமளவல்லியும் அதை வேத வாக்கியமாக நம்பியிருந்தாள்: அன்றிரவு முழுதும் கல்யாணியம்மாள் அந்த விஷயத்தைக் குறித்து யோசனையில் ஆழ்ந்திருந்தாள். மறுநாளும் துரைஸானியம்மாள் சிறை வைக்கப் பட்டிருந்ததால், அந்த விஷயம் பங்களா முழுதும் பரவி, அவளது கற்பைப்பற்றி எல்லோரும் இழிவாகப் பேச இடங்கொடுக்கும் ஆதலால், மறுநாட் காலையில் கதவைத் திறந்து வைத்துவிட வேண்டும் என்று கல்யாணியம்மாள் முடிவு செய்து கொண்டாள். மோகனரங்கன் செங்கல்பட்டிற்கு அனுப்பப்பட்டுப் போனமை யால், அவள் அவனோடு ஒடிப் போவாள் என்ற அச்சம் அவ்வளவாக இல்லாமல் இருந்தது. அப்படி இருந்தாலும், தான் அவளது விஷயத்தில் எச்சரிப்பாகவே இருக்க வேண்டும் என எண்ணிய கல்யாணியம்மாள், தனது இளைய குமாரியான கோமளவல்லியை நோக்கி, “கண்ணு! நீ போய், அக்காளுடைய அந்தப்புரத்திலேயே இன்று பகல் முழுதும் இருந்து, அவளைப் பார்த்துக் கொண்டிரு. இன்றைக்கு முழுதும் அவள் வெளியே வந்து நடமாடாமல் உள்ளேயே இருக்க வேண்டும் என்று நான் கண்டிப்பாக உத்தரவு செய்ததாகச் சொல். நானும் காலைத் தபால்களைப் பார்த்துவிட்டு, அக்காளுக்கு வேண்டிய மருந்துகளை வாங்கிக் கொண்டு, அங்கே வந்து உங்களைப் பார்த்து விட்டு வருகிறேன். அக்காள் பிடிவாதக்காரி, அவள் ஏதாவது அலுவலின் மேல் எங்கேயாவது அனுப்பினாலும், நீ அவ்விடத்தை விட்டு வரக்கூடாது. உன்னோடு கூட நான்கு தாதிகளையும் நான் அனுப்புகிறேன். ஏதாவது காரியம் ஆக வேண்டுமானால், அவர்கள் மூலமாகச் செய்து கொள்ளுங்கள். தெரிகிறதா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/252&oldid=646096" இலிருந்து மீள்விக்கப்பட்டது