பக்கம்:மதன கல்யாணி-2.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மதன கல்யாணி

அசங்கியமாக இந்த விஷயம் போகும்படி நீங்கள் விரும்பும் பட்சத்தில், அங்கே இந்த வழக்கு எப்படி முடிந்தாலும், உலகத்தார் மாத்திரம் மதனகோபாலன் யோக்கியன் என்றே எப்போதும் நினைப்பார்கள்; ஏனென்றால், அவனுடைய நன்னடத்தை அவ்வளவு அதிகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. ஆகையால், நீங்களே அவன் மேல் அடாப்பழி சுமத்துகிறீர்கள் என்று ஜனங்கள் அறிந்து கொள்வதன்றி நீங்கள் மிகவும் விபசார புத்தியுள்ளவர்கள் என்பதையும் சுலபத்தில் கண்டு கொள்வார்கள். தாயார் இப்படிப்பட்ட கேவலமான நடத்தையுள்ளவளாக இருக்கையில், தக்க மனிதர் எவரும், பெண்களைக் கலியாணம் செய்து கொள்ள முன்னுக்கு வருவார்களா? உங்களுடைய பையன் கூட, உங்களுக்கு அடங்கி நடப்பதில்லை என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த விஷயம் அவனுடைய காதுக்கு எட்டினால் அவன் உங்களை இனி ஒரு பொருட்டாக மதிப்பானா? ஆகையால், ஒரு காரியம் செய்யுங்கள். நீங்கள் யார் யார் வீட்டில் போய் அவன் மேல் அவதூறு சொன்னிகளோ, அங்கங்கே மறுபடியும் போய், அவன் யோக்கியன் என்றும், நீங்கள் நேற்று சொன்னது தவறென்றும் சொல்லி, அவனுடைய மாணஹானியை விலக்கி விடுங்கள். நாங்கள் அவ்வளவோடு திருப்தியடைந்து நின்று விடுகிறோம். ஆனால், அப்படிச் செய்வது உங்களுக்குக் கொஞ்சம் அவமானமாகத்தான் இருக்கும். இருந்தாலும், உலகமே வெளிப்படையாகச் சிரிப்பதைவிட, பத்துப்பேர் தமக்குள் உங்களைப் பற்றி இழிவாக நினைப்பது ஒரு பொருட்டல்ல. நன்றாக யோசனை செய்து கடைசி முடிவாகச் சொல்லி விடுங்கள். ஏதோ தவறுதலாகக் காரியம் நடந்துவிட்டது. அதைப்பற்றி, நாங்கள் உங்களை மிகவும் கொடுமையாக நடத்த விரும்ப வில்லை” என்றார்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் எதுவரினும் வரட்டும் என்றும், தான் எப்படியாகிலும் தந்திரம் செய்து தப்பித்துக் கொள்ளலாம் என்றும் நினைத்து மிகவும் துணிவடைந்தவளாய், “நான் சொல்ல வேண்டியதை எல்லாம் முதலிலேயே சொல்லி விட்டேன். இனிமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நீர் வயசான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/26&oldid=646110" இலிருந்து மீள்விக்கப்பட்டது