பக்கம்:மதன கல்யாணி-2.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 261

இங்கே வந்து தாறுமாறாகப் பேசுவதோடு, நமக்கு ஏதாவது துன்பம் செய்தாலும் செய்வான். அந்த உடத்திரவங்களை எல்லாம் நான் எப்படியாவது பொறுத்துக் கொள்ளலாம். நாளைய தினம் இவர்கள் போய் பாலாம்பாளையும் தூக்கிக் கொண்டு போய் ஒட்டால், அதிலிருந்து என்னென்ன சங்கடங்கள் உண்டாகுமோ தெரியவில்லையே! அவனோ அந்தக் கூத்தாடிச்சியின் மோக வலையில் மீளாதபடி சிக்கிக் கொண்டிருக்கிறான். அந்த நிலைமையில், அவள் போய்விட்டால், அவன் தலைகால் தெரியாமல், எதைச் செய்தாலும் செய்வான். அவனுடைய குணம் எப்படிப்பட்ட தென்பது உனக்குத் தெரிந்திருந்தும், முன்பின் யோசிக்காமல் நீயும் அந்த ஏற்பாட்டுக்கு இணங்கிவிட்டாயே! கட்டையன் குறவன் பெருத்த மிருகமாயிற்றே! அவனுக்கு இந்த யோசனை எல்லாம் தோன்றுமா? உள் மர்மங்களை எல்லாம் தெரிந்து கொண்டிருக்கிறவளான நீ யல்லவா, “அப்படிச் செய்ய வேண்டாம். அம்மாள் விழித்துக் கொண்ட பிறகு அவர்களிடத்தில் யோசனை செய்து நாளைக்குச் சொல்லுகிறேன். அதற்கு மேல், எந்தக் காரியத்தையும் செய்யலாம்” என்று சொல்லியிருக்க வேண்டும். இனி அவனுக்கும் நமக்கும் நேருக்கு நேர் யுத்தந்தான் நடக்கப் போகிறது. நீ கொஞ்சம் யோசனை செய்திருந்தால் இந்தப் புதிய சங்கடம் இல்லாதிருக்கும் அல்லவா?” என்றாள்.

அவள் அவ்வாறு கூறி முடித்த போது ஒரு வேலைக்காரி அந்த அந்தப்புரத்தின் வெளியிலிருந்தபடி கதவை மெதுவாகத் தட்டி, “பொன்னம்மா! பொன்னம்மா!” என்று தாழ்ந்த குரலாகக் கூப்பிட்டாள். அதைக் கேட்ட பொன்னம்மாள், ஏதோ அலுவல் இருப்பதனாலேயே, வேலைக்காரி அவ்வாறு துணிந்து கூப்பிடுகிறாள் என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து போய்க் கதவை அடைந்து, அடுத்த நிமிஷத்தில் திரும்பிக் கல்யாணியம் மாளிடத்தில் வந்து தபாற்காரன் வந்திருப்பதாகவும், அவன் இதர கடிதங்களோடு, ரிஜிஸ்டர் செய்யப்பட்ட ஒரு கடிதமும் கொண்டு வந்திருப்பதாகவும், எஜமானியம்மாளுடைய கையெழுத்தை வாங்கிக் கொண்டு அந்த ரிஜிஸ்டர் காகிதத்தைக் கொடுக்க வேண்டும் என்று அவன் சொல்வதாகவும் தெரிவித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/265&oldid=646121" இலிருந்து மீள்விக்கப்பட்டது