பக்கம்:மதன கல்யாணி-2.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 மதன கல்யாணி

ஒன்றையும் அறியாதவள் போல ஊளையிடுகிறாயே! இப்படி எல்லாம் பாசாங்கு செய்தால், உன்னை விட்டுவிடுவோம் என்று எண்ணிக் கொண்டாயா? வா இப்படி நீ நிஜத்தைச் சொன்னால் தப்பலாம். இல்லாவிட்டால், இன்றோடு, உன்னுடைய உடம்பு உனக்கு உதவாமல் போய் விடும்” என்று அதட்டிக் கூறிய வண்ணம், அவளது உடம்பின் மீதிருந்த துப்பட்டியைக் கையால் பிடித்து அவளை நிறுத்தினார். அவள் அப்போதும் தனது ரோதனத்தை நிறுத்தாமல், “ஐயோ! இந்த அக்கிரமத்தைத் கேட்பார் இல்லையா கோஷாப் பெண் பிள்ளையைப் பிடித்து அக்கிரமம் செய்கிறார்களே! ஏன் ஐயா! என்னைத் தொடுகிறீர்? நான் நிஜத்தைச் சொல்லுகிறேன். என்னைத் தொட வேண்டாம். துர நில்லும்” என்றாள்.

அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் தமது கையின் பிடிப்பை விட்டு, “அது சரி; உன்னைத் தொடவில்லை; உண்மையைச் சொல்லி விடு” என்றார். அவள் அவர்களை நோக்கி, “உண்மை யாகவே நான் பிச்சைக்காரிதான்; வழியோடு வந்து கொண்டிருந்தேன். இந்த ரஸ்தாவில் கொஞ்சதுரத்துக்கப்பால் ஒர் ஆள் இருக்கிறான். அவன் இந்த இடத்தில் நான் இருந்தால் இவர்கள் கடிதம் கொடுப்பார்கள்; அதை வாங்கிக் கொண்டு வந்து கோடுத்தால், 4-அணா கொடுப்ப தாகச் சொன்னான். அதற்காக வந்திருந்தேன். எனக்கு வேறே ஒரு சங்கதியும் தெரியாது. இவர்கள் கடிதம் கொடுத்தது நிஜந்தான். அதை நான் மடியில் சொருகிக் கொண்டிருக்கிறேன். என்னை விட்டு விடுங்கள்; நான் போக வேண்டும்” என்றாள். உடனே இன்ஸ்பெக்டர், “சரி; அப்படியானால், நாங்கள் உன்னோடு கூடவே வருகிறோம். அந்தக் கடிதத்தை எங்களுக்கெதிரிலேயே நீ அந்த மனிதரிடத்தில் கொடு. உன்னை விட்டு விடுகிறோம்” என்றார். அவள் “அப்படியே ஆகட்டும்; நடவுங்கள்” என்று கூறி, ஏழெட்டு கஜதுரம் நடந்தவுடனே, ஏதோ நினைத்துக் கொண்டவள் போல நின்று, “அந்த மனிதன் இருக்கிறானோ இல்லையோ? அவன் இருந் தாலும், உங்களுக்கெதிரில் நான் இதை அவனிடத்தில் கொடுத்தால், அவன் வாங்கிக் கொள்ளாமல் அன்னியன் போலப் பாசாங்கு பண்ணுவான்; நீங்கள் என்மேல் கோபித்துக் கொள்வீர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/304&oldid=646199" இலிருந்து மீள்விக்கப்பட்டது