பக்கம்:மதன கல்யாணி-2.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 31

கொண்டு, முகம் வெளியில் தெரியாமல் முகமூடி போட்டு மறைத்துக் கொண்டு வந்து சேருகிறேன். நீரும் ஒரு வெள்ளைக் கார துரையைப் போல தொப்பி உடைகளை அணிந்து கொண்டு வந்து சேரும். நீர் நல்ல சிவப்பான தேகம் உடையவர் ஆதலாலும், நாம் இரவில் சந்திக்கிறபடியாலும் எவரும் உம்மை இன்னார் என்று கண்டுபிடிக்க முடியாது. யாரோ துரையும் துரைஸானியும் தனியாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், எவரும் நமக்கருகில் நெருங்கவும் மாட்டார்கள்; நாம் என்ன செய்கிறோம் என்பதைக் கவனிக்கவும் மாட்டார்கள். நாம் தாராளமாக மனசை விட்டுப் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போய்விடலாம். ஆனால் முகமூடி போட்ட துரைஸானிகள் எத்தனையோ பேர் வருவார்கள். ஆகையால் இந்தக் கடிதத்தோடு ஒரு வைரப்பதக்கம் அனுப்பி இருக்கிறேன். இதே மாதிரியான இன்னொரு வைரப்பதக்கம் என்னிடத்தில் இருக்கிறது. அதை நான் என்னுடைய இடது மார்பின் மேல் சொருகிக்கொண்டு, பாலிவாலா பார்சி நாடகக் கொட்டகைக்கெதிரில் நின்று கொண்டிருக்கிறேன். நீரும் வெள்ளைக்கார துரை உடையில் வருவதால், நானும் சுலபத்தில் உம்மை அடையாளங்கண்டு கொள்ளும் பொருட்டு, இந்த வைரப் பதக்கத்தை நீர் உமது சட்டையில் வலது மார்பின் மேல் சொருகிக் கொண்டு, சரியாக இரவு ஒன்பது மணிக்கு அந்த இடத்துக்கு வந்து சேரும். நாம் உடனே சந்தித்து, சந்தேகத்துக்கு இடமின்றிப் பேசிக் கொண்டே சோலைக்குள் போய் விடுவோம். நீர் இன்று வரத் தவற மாட்டீர் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். உமக்கு வேண்டிய வெள்ளைக்கார உடைகளை எல்லாம் வாங்கிக் கொள்வதற்காக இதோடு 500-ரூபாய் நோட்டு ஒன்று அனுப்பி இருக்கிறேன். இப்போதே துரைராஜாவாக இருக்கும் உம்மை, நான்துரைஸானியாக வந்து அடைவதே பொருத்தமான காரியமல்லவா. நீர் இன்று வரத்தவறினால், உமக்கு என் மேல் பிரியம் இல்லை என்று நான் யூகித்துக் கொண்டு, நாளைக்கே நான் கிணற்றில் விழுந்து உயிரை விட்டு விடுகிறேன். நான் உம்மை விட்டாலும், என்னைக் கொன்ற பழி உம்மை விடாது.

இப்படிக்கு உம்முடைய,

துரையம்மாள்.

in.&.H-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/35&oldid=646248" இலிருந்து மீள்விக்கப்பட்டது