பக்கம்:மதன கல்யாணி-2.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 73

மிகவும் வணக்கமாக உள்ளே நுழைந்தான். அவன் சுமார் பதினெட்டு வயதடைந்தவன் என்றும், மன்மதனைப் பழித்த மகா வசீகரமான அழகும், மிருதுவான சொல்லும், குளிர்ந்த பார்வையும், அழகான நடையும், பதற்றமில்லாத சொற்களும், கபடமற்ற மனதும், பெண் சாயலும் வாய்ந்த சுந்தரப் புருஷன் என்பது, நான்காவது அதிகாரத்தின முடிவில் சொல்லப்பட்டிருக் கிறது. இவனும், மதனகோபாலனும் சமமான அழகு வாய்ந்தவர் களாயினும், மதனகோபாலனது தோற்றத்தில் ஆண்மையும், கம்பீரமும் இயற்கையிலேயே அமைந்திருந்தன; மோகனரங்க னிடத்திலோ, பெண்தன்மையும், நாணமும் நிறைந்திருந்தன. மதனகோபாலன், பெண்பாலார் கண்களுக்கும், மனத்திற்கும் ஆனந்த வடிவமாகக் காணப்பட்டான். மோகனரங்கனோ, ஆண்பாலாரே அதிகமாக மயங்கத் தகுந்த அற்புதமான முகக்களையைப் பெற்றிருந்தான். இருவரும் சகலமான உத்தம குணங்களும் புருஷ லட்சணங்களும் வாய்ந்தவர்களாக இருந்தனர் ஆயினும், மோகனரங்கனிடத்தில் ஸ்திரீகளின் வசீகரத் தன்மை உச்சி முதல் உள்ளங்கால் வரையில் ஜ்வலித்தது. மகாவிஷ்ணுவின் மோகனாவதாரம் போல விளங்கிய மோகனரங்கன் என்னும் யெளவனப் புருஷன் புது மாமியாருக்கெதிரில் வரும் நாட்டுப் பெண்ணைப் போல, நாணிக் கோணி நடந்து வர, கல்யாணி யம்மாளிடத்தில் அவன் கொண்டிருந்த பயத்தினால், அவனது கால்களும், கைகளும், முகமும், உடம்பும் ஒன்றோடு ஒன்று கோபித்துக் கொண்டு முலைக்கு மூலை நெளிந்து சென்றன; அவன் வந்ததை உணர்ந்த கல்யாணியம்மாள் எழுந்து மெத்தையில் சாய்ந்து கொண்டவளாய் அவனை நோக்கி, “ஏய் மோகனரங்கம்! இப்படியே இந்த மேஜைக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரு கடிதம் எழுது நான் சொல்லுகிறபடி எழுது” என்றாள். அதைக் கேட்ட மோகனரங்கன் கட்டிலுக்கருகில் ஒரு மேஜையின் மேல், காகிதம் முதலியவைகளை வைத்துக் கொண்டு, பக்கத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து, இறகைக் கையில் எடுத்துக் கொண்டு, கல்யாணியம்மாளது முகத்தை நோக்க, அந்த அம்மாள் அடியில் வருமாறு கடிதம் எழுதச் சொன்னாள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/77&oldid=646334" இலிருந்து மீள்விக்கப்பட்டது