பக்கம்:மதன கல்யாணி-2.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 85

துரைராஜா. அப்படியானால் அதோ இருக்கிற சுந்தர விலாசமும் இதே சமரபதி முதலியாருடைய வீடுதானோ?

அண்டை வீட்டுக்காரன்:- இல்லை, இல்லை. அது ஒரு செட்டியாருடையது; அவர் வெளியூரில் இருக்கிறார். ஆகையால் அதன் வாடகை இவ்வளவு அதிகமாக இல்லை.

துரைராஜா- அதன் வாடகை எவ்வளவு? அண்டை வீட்டுக்காரன்:- அறுபது ரூபாய்தான்; ஆனால் அது: இதைவிட ஒன்றரை மடங்கு பெரியது.

துரைராஜா:- அப்படியானால், அந்த வீட்டிலிருப்பவர் அதிர்ஷ்டசாலிகள்தான்; அங்கே யாரிருக்கிறார்கள் தெரியுமா உமக்கு?

அண்டை வீட்டுக்காரன்:- (தணிவான குரலில்) சுமார் இருபது வயசிருக்கும் ஒரு பையன் இருக்கிறான். அவனுடைய பூர்வீகம் மைசூராம். அவன் வீணை வாசிப்பதில் மகா சாமர்த்தியசாலியாம்; அவன் இந்த ஊரில் அநேகம் பெரிய மனிதர்களுடைய வீடுகளில் போய் பாடம் கற்றுக் கொடுக்கிறானாம்; பெருத்த கச்சேரிக்கும் போகிறானாம்; அவன் மைசூர் ராஜா முதலிய பெரிய இடங்களில் இருந்து ஏராளமான தோடாக்களும் பிருதுகளும் வாங்கினவனாம். அவன் இந்த ஊரில் மாசம் ஒன்றுக்கு ஒரு சுமார் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறானாம் - என்றான். - - -

துரைராஜா:- (அந்த விவரத்தைக் கேட்பதில் அவ்வளவாக சிரத்தை இல்லாதவன் போல நடித்து) அப்படியானால், அவன் மாத்திரமா அவ்வளவு பெரிய வீட்டில் இருக்கிறான்.

அண்டை வீட்டுக்காரன்:- (முன்னிலும் அதிக தணிவான குரலில் ரகசியமாகப் பேசத் தொடங்கி) சங்தி ரகசியமானது; அதனாலே தான் வாசற்கதவு, ஜன்னல் கதவுகள் எல்லாம் எப்போதும் சாத்தப் பட்டிருக்கின்றன - என்றான்.

துரைராஜா:- (மிகுந்த திகைப்பும், வியப்பும் அடைந்தவனாய் புன்சிரிப்போடு அந்த மனிதனை நோக்கி) என்ன ரகசியம் அது? தெரிந்திருந்தால் சொல்லுமேன். நானும் ரகசியமாகவே வைத்துக் கொள்ளுகிறேன் - என்று மிகவும் நயமாகக் கேட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/89&oldid=646357" இலிருந்து மீள்விக்கப்பட்டது