பக்கம்:மதன கல்யாணி-3.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 மதன கல்யாணி மறந்து போயிருந்த அந்த விசனகரமான விஷயங்களை நான் எடுத்துப் பேசுவது சரியல்ல. இவருடைய வரலாற்றைத் தெரிவிக்கும்படி இவரே என்னைக் கேட்டுக் கொண்டது பற்றி அதை நான் ஒருவாறாகக் குறிக்க நேர்ந்தது; என்னுடைய ஆப்த நண்பரான இவர் இனி இந்த ஊரிலேயே இருப்பார் என்பதைப் பற்றி நான் அடையும் சந்தோஷம் அபாரமானது. இந்த ஊரில் உள்ள முக்கியமான எல்லா கனவான் களோடும் பழக்கம் செய்து கொள்ள வேண்டும் என்பது இவருடைய முக்கியமான கருத்து; அதன் பொருட்டும் இந்த விருந்து தயாரிக்கப்பட்டது. தாங்கள் எல்லோரும் விஜயம் செய்து இவரோடு பழகிப்போய்விட்ட படியால் இந்த விருந்தின் நோக்கமும் கைகூடிவிட்டது. இனி என்னைப் போன்றவர்கள் மத்தியஸ்தமாக இருந்து பேச வேண்டிய அவசியமே இல்லை ஆகையால், இவ்வளவோடு நான் உட்கார்ந்து கொள்ளுகிறேன்" என்று கூறிவிட்டு சிவஞான முதலியார் உட்கார்ந்து கொண்டார். அங்கே கூடியிருந்தோர் யாவரும் அந்த வரலாற்றைக் கேட்டு மிகுந்த இரக்கமும் விசனமும் அடைந்து கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரது விஷயத்திலும், மதன கோபாலனது விஷயத்திலும் மிகுந்த மதிப்பையும் பாராட்டத் தொடங்கி எழுந்த விடைபெற்றுக் கொண்டு போக எத்தனிக்க, அந்தச் சமயத்தில் அந்தக் கூட்டத்திலிருந்த ஒரு மனிதர் எழுந்து நின்று, "நண்பர்களே! எல்லோரும் கொஞ்ச நேரம் தயவு செய்து ஆசனங்களில் அமர வேண்டும்" என்று உரத்த குரலில் பேச, அதைக் கேட்ட எல்லோரும் திடுக்கிட்டு அந்தக் குரலுண்டான திசையில் திரும்பிப் பார்க்க, அவ்விடத்தில் மைலாப்பூர் வக்கீல் அருணகிரிப் பிள்ளை நின்று கொண்டிருந்தார். அவர் ஒருவேளை, அந்த விருந்துண்டதைப் பற்றி ஜெமீந்தாருக்கு நன்றியறிதல் கூற விரும்புகிறார் என்று நினைத்த எல்லோரும் உடனே கீழே உட்கார்ந்து கொண்டனர். அவர் எழுந்ததைக் கண்ட சிவஞான முதலியாரது முகம் சடக்கென்று மாறுபட்டு அவரது மனம் மிகுந்த சஞ்சலமடைகிற தென்பதைக் காட்டியது. அவரது தேகம் உட்கார்ந்திருக்க மாட்டாமல் தத்தளிக்கிறது. கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் ஒன்றையும் அறியாதவர் போல வியப்போடு அருணகிரிப் பிள்ளையை நோக்குகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/243&oldid=853386" இலிருந்து மீள்விக்கப்பட்டது