பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தக் கடவுள் தானா ?

9


இந்தக் கடவுள் இருக்கிறார் என்றால், அவர் நல்லவர் என்பதை நாம் எப்படி அறிவது? அவர் அருள் பரிபாவிப்பவர் என்பதை நாம் எப்படி நிருபிப்பது? அவர் மக்க ளாகிய குழந்தைகளைப்பற்றி எவ்வகையில் கவலைப்படுகிறார். என்பதை நாம் எப்படித் தெளிவது? இந்தக் கடவுள இருக்கிறார் என்றால், அவருடைய கோடானுகோடி ஏழைக் குழந்தைகள், நிலத்தை உழுவதையும், விதை விதைப்பதையும், நாத்து நடுவதையும் அவர் பல தடவை பார்த்திருக்கிறார்; அப்படிப் பார்த்தபோதெல்லாம், அவர்கள் தம் வாழ்க்கையை ஈடேற்ற, விளையப்போகும் கதிர் மணிகளை நம்பியிருந்தனர் என்பதை நன்கு அறிவார்; அப்படியிருந்தும் இந்த நல்லவர் — அருளாளர் — கடவுள் மழையைப் பெய்விக்காமலேயே நிறுத்திவிட்டிருக்கிறார். மனிதன் நட்ட செடிகளெல்லாம் காய்ந்து அழிந்து போனதை அவர் பார்த்தார்; ஆனால் அவர் மழையை அனுப்பவில்லை. வறண்ட நிலத்தை வாடிய கண்களால், மக்கள் நோக்கிக் கொண்டிருந்ததை அவர் பார்த்தார்; அப்படியிருந்தும் அவர் மழையை அனுப்பவில்லை தங்களிடத்திலுள்ள சிறிது உணவைக் கொஞ்சம், கொஞ்சமாக அவர்கள் தின்று கொண்டு வந்ததைப் பார்த்தார் ; பிறகு அவர்கள் பட்டினியால் வாடும் நாட்களையும் பார்த்தார்: அவர்கள் மெதுவாக அழிந்து வருவதையும் பார்த்தார்; அவர்கள் பட்டினியைப் பார்த்தார் ; அவர்களது குழிவிழுந்த கண்களைப் பார்த்தார்: அவர்களுடைய வேண்டுதலைகளைக் கேட்டார்; அவர்கள் தாம் வைத்திருந்த விலங்குகளையே அடித்துத் தின்றதையும் பார்த்தார்; தாய்மார்களும், தந்தைமார்களும் பசியால் பைத்தியம் பிடித்ததையும், தங்கள் பச்சிளங் குழந்தைகளைக் கொன்று தின்றதையும் பார்த்தார்; மேலேயுள்ள வானம் வெண்கலத்தகடு போலவும், கீழேயுள்ள தரை இருப்புத்தகடு போலவும் அவர்களுக்குக் காணப்பட்டதையும் அவர் பார்த்தார்; அப்படியிருந்தும் அவர் மழையை அனுப்பவில்லை. இரக்கம் என்னும் பூ இந்தக் கடவுளின் இதயத்தில் மலர்ந்தது என்று நாம் சொல்ல முடியுமா?