100
மதமும் மூடநம்பிக்கையும்
பணிந்து அதனோடு ஓட்டியே நிற்பார்கள்; அவர்கள், அதற்குச் சிறிதளவு தத்துவார்த்த விளக்கமே கொடுப்பார்கள். ஒரு மதிப்பிற்குரிய பெரியவர் குழந்தைகளை உடையவராக இருக்கிறார் என்ற காரணத்துக்காகவே, அவருக்குக் குடியிருக்க இடமளிக்க மறுக்கும், பல கட்டுகளை உடைய வீட்டுக்கு வாடகை வசூலிப்பவனைப் போன்றவர்கள் அவர்கள். "ஆனால், என்னுடைய மக்கள் இருவரும் மணம்புரிந்து கொண்டவர்கள். அவர்கள் தனியே அயோவாவில் வாழ்கிறார்கள்” என்று அந்தப் பெரியவர் சொல்கிறார். அதற்கு அந்த வீட்டு வாடகை வசூலிப்பவன், "அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. குழந்தைகளை யுடைய எவருக்கும் வீட்டை வாடகைக்கு விடக்கூடாது என்பதே, எனக்கிடப்பட்டிருக்கும் கட்டளையாகும்” என்று கூறினான். இதைப் போன்றதுதான் அந்தப் பழமை விரும்பிகளின் நிலைமையும்.
வைதீக மாதா கோவில்கள் எல்லாம். முன்னேற்றம் என்னும் நெடுவழியின் குறுக்கே, போடப்பட்டிருக்கும். தடைக்கற்களாகும். ஒவ்வொரு வைதீகக் கொள்கையும் ஒரு இருப்புச் சங்கிலியாகும்; ஒரு இருட்டறையாகும். "கடவுளருளிய அந்த வேதத்தில்" நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொரு நம்பிக்கையாளனும் ஒவ்வொரு அடிமையாவான். அவன் பகுத்தறிவை அதன் அரியணையினின்றும் வீரட்டியடித்துவிட்டு, அதற்குப்பதிலாக அச்சத்திற்கு முடிசூட்டியிருப்பவனாவான்.
பகுத்தறிவு மூளையின் ஒளியாகும்; செஞ்ஞாயிறாகும். அதுதான் உள்ளத்தைச் சுற்றி அளவிடும் அளவு கருவியாகும்; நிலைத்து நிற்கும் வடமீன் (நட்சத்திரம்) ஆகும்; மேகக்கூட்டங்களை யெல்லாம் தாண்டிக்கொண்டு, வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் மலைமுகடாகும்!