பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

மதமும் மூடநம்பிக்கையும்


கூடுகளையெல்லாம் ஆராய்ந்து பார்த்து மனிதனின் தொடக்கத் தலைமுறைகளை விளக்கிக் காட்டினர்; புனித வேதம் எவ்வளவு பிற்போக்கானது என்பதையும் அவர்கள் நிரூபித்துக் காட்டினார்கள். பின்னர் உள்ளது சிறத்தல் கொள்கை வளர்ந்தது; பொருத்தம் ஏற்படுத்திக் கொண்டன. வாழ்தலும், இயற்கையான தேர்வு செய்து கொள்ளலும் ஆன கொள்கைகள் இடம்பெற்றன. ஆயிரக்கணக்கான அதிசயக் காட்சிகளுக்கு விளக்கந் தரப்பட்டன; அறிவியல் மூடநம்பிக்கை ஏந்தியிருந்த வாளைத் தாக்கி முறித்துப் போட்டது. உயிரணுவின் கொள்கை வளர்ந்தோங்கியது; உயிரணுக்களின் கருத்தோற்றம் ஆராய்ச்சி செய்யப்பட்டது; நுண் நோக்கு ஆடி (பூதக்கண்ணாடி) நோய்தரும் கிருமிகளைக் கண்டுபிடித்துச் சொல்லிற்று; பிளேக்கை எப்படித் தடுக்கலாம் என்பதற்கான முறையையும் சொல்லிக் கொடுத்தது. எண்ணற்ற கண்டுபிடிப்புகளோடு இந்தக் கொள்கைகளும், ஆராய்ச்சி முடிவுகளும், விடுதலையறிவின் குழந்தைகளாகும்!