74
மதமும் மூடநம்பிக்கையும்
கப்படுகிறது, சிறிது உழைப்பிற்குப் பிறகே தீயது அழிக்கப்படுகிறது. ஒவ்வொன்றும் நண்பர்களாலும் பகைவர்களாலும் சூழப்பட்டிருக்கின்றன. அவை அன்பால் காக்கப்படுகின்றன. வெறுப்பால் அழிக்கப்படுகின்றன. வளர்ச்சியின் அறிகுறி எவ்வளவு தெளிவாகத் தெரிகிறதோ அவ்வளவு தெளிவாக வீழ்ச்சியின் அறிகுறியும் தென்படுகிறது; வெற்றியின் அறிகுறியைப் போலவே தோல்வியின் அறிகுறியும் புலப்படுகிறது; இன்பத்தின் அறிகுறியைப் போலவே, துன்பத்தின் அறிகுறியும் விளங்குகிறது. இயற்கை கேடயமும் வாளும் ஏந்திக்கொண்டு ஒருகையால் கட்டி முடிக்கிறது மற்றொரு கையால் அழித்துத்தள்ளுகிறது. ஒரு கையால் காப்பு அளிக்கிறது. மற்றொரு கையால் கொன்று குவிக்கிறது; ஆனால் ஆக்கத்திற்காக அழிவு வேலை செய்கிறது, எல்லா வாழ்வும் சாவை நோக்கி நடக்கின்றன; எல்லாச் சாவும் வாழ்வை நோக்கித் திரும்புகின்றன. எங்கு பார்க்கினும் கழிவும் சேமிப்பும், அலட்சியமும் அக்கரையும் நிகழ்கின்றன!