98
மதமும் மூடநம்பிக்கையும்
இந்தக் கடவுளும், அவரை ஏற்படுத்தியவர்களின் சாயலையே கொண்டிருந்தார். மனிதன் நாகரீகம் அடைய அடைய, அவன் அருளுடையவனாக வளர்ந்தான், நீதியை விரும்பத் தொடங்கினான், அவனது உள்ளம் விரிய விரிய அவனது எண்ணமும் தூய்மை யடைந்தது, சிறந்து விளங்கிற்று, ஆகவே அவனது கடவுளும் அவனைப் போலவே அருளுடையவராகவும், அன்புடையவராகவும், வளர்ந்தார்!
நமது நாட்களில் ஜெஹோவா மறைந்துவிட்டார் அவர் முழுத்தன்மை நிரம்பியவராகக் கருதப்படுவதில்லை; இப்பொழுதெல்லாம், மதவாதிகள், ஜெஹோவாவைப் பற்றிப் பேசுவதில்லை; ஆனால் அன்பான கடவுளைப் பற்றியும், முதலிறுதியற்ற எல்லையில்லாத் தந்தையைப்பற்றியும், நிலையான நண்பரைப் பற்றியும், மனிதனின் நம்பிக்கைக்குக் கொள்கலமானவரைப்பற்றியுமே பேசுகிறார்கள். ஆனால், அவர்கள் அன்பான கடவுளைப்பற்றிப் பேசும்போதுதான், பெரும் புயற்காற்றுகள் அழிவையும் பாழையும் உண்டாக்குகின்றன; நில அதிர்ச்சி உயிரினங்களை விழுங்குகிறது; வெள்ளப் பெருக்கு பேரழிவை உண்டாக்குகிறது; பேரிடி முகிலிலிருந்து விழுந்து மக்களின் உயிரை வவ்வுகிறது; பிளேக்கும் காய்ச்சலும், சாவு என்னும் வயலில் இடைவிடாமல் அறுவடை அறுத்துக்கொண்டே யிருக்கின்றன !
அவர்கள், இப்பொழுது கூறிவருகிறார்கள். எல்லாம் நன்மைக்கே என்று. தீமை மாறு உருவில் நலம் புரிவதற்காக வந்த நன்மை என்றும், துன்பம் ஏற்றல் மக்களுக்கு வலிவையும், வளத்தையும் உண்டாக்கும் என்றும், அதுவே பண்பை உருவாக்குகிறது என்றும்; அதே நேரத்தில் மகிழ்ச்சி நலிவையும், தாழ்வையும் தருகிறது என்றும் கூறி வருகிறார்கள். இது உண்மையாக இருக்குமேயானால், நரகத்தில் கிடக்கும் ஆன்மாக்கள் எல்லாம் உயரிய நிலைக்குப் போகவேண்டும்; மோட்சத்திலிருக்கும் ஆன்மாக்களெல்லாம் வாடி வதங்கவேண்டும்!