பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
X

 (மந்திரங்களுக்கு) எப்படி இவ்வளவு பெரிய ஆற்றல் வரும் என்ற சந்தேகமும் பலர் மனத்தில் தோன்றுவது இயல்புதான். ஓர் உதாரணத்தால் விளக்கலாம். சாதாரண மின்சார பல்பிலிருந்து வெளிப்படும் ஒளி (Light) நாம் பொருள்களைக் காண்பதற்கு உதவுகிறது. அதற்கு மேல் அந்த ஒளிக்கு வேறு ஆற்றல் இல்லை. ஏன் என்றால், அந்த ஒளி ஒரு முகப்படுத்தப்படாமல் சிதறிச் செல்கின்ற (Dissipation) காரணத்தால் இந்நிலை ஏற்படுகிறது. அதே ஒளியைச் சிதறிச் செல்லாமல் ஒருமுகப்படுத்தி ஒரு குறிப்பிட்ட இரசாயனப் பொருள் அல்லது சிகப்புக்கல், வைரம் போன்றவற்றில் செலுத்தி அந்தச் சிதறலை முழுவதுமாகத் தடுத்து ஒரே முகமாக வெளியேற்றினால் அப்படி வெளியேற்றப்பட்ட ஒளி சந்திரமண்டலம் வரை எந்தவித தங்கு தடையும் இல்லாமல் செல்கிறது என்பதையும் அதே ஒளிக் கற்றை கனத்த இரும்புப் பாளங்களில் துளைபோட வல்லது என்பதையும் இன்றைய விஞ்ஞானம் நிரூபித்துக் காட்டியுள்ளது. இப்பணிகளைச் செய்யும் ஒளிக்கற்றையை லேசர் (Laser) என்று விஞ்ஞானம் கூறுகிறது. விஞ்ஞானம் ஒளியைப் பயன்படுத்திச் செய்யும் இதே செயலை நம் முன்னோராகிய விஞ்ஞானம் அறிந்த மெய்ஞ்ஞானிகள் ஒலியைப் பயன்படுத்திச் செய்யுமாறு பணித்துள்ளனர்.

ஒம், கம், செளம், ஹ்ரீம், க்ரீம், க்லீம் என்பன போன்ற மந்திரங்களுக்கு எவ்விதப் பொருளும் இல்லை. இவற்றை மூல எழுத்துகள் (பீஜாட்சரங்கள்) என்று நம் முன்னோர் கூறினர். வேறு பொருள் இல்லா விட்டாலும் இம் மந்திரங்கள் ஒருமுகப்படுத்தப் பெற்ற அதிர்வெண்களைக் கொண்ட எழுத்துகளின் சேர்க்கை ஆதலால் மிகு அதிர்வு ஒலியின் (Ultrasonic) பயனை விளைவிக்கின்றன.