பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சித்தர்கள் 15


கோளாறு என்றால் திருமுறை ஏற்கெனவே இருந்தது. அவ்வுளவுதான் சமாசாரம். இவனுக்கு முன்னாலே, ஐந்துபேர்கள் திருமுறை பாடுகிறவர்களை வரிசைப் படுத்தி அவர்களுக்கு நிபந்தம் விட்டுள்ளதுபோல இவனும் விட்டிருக்கிறான். அதிலே ஒன்றும் அதிசயம். இல்லை. ஆனால் ஒரு வித்யாசம். அவர்கள் எல்லாம் தமிழர்கள். இங்கே இருக்கிற தமிழர்களை எல்லாம் தேவாரம் பாட வைத்து நிபந்தம் கொடுத்தார்கள். இவன் அதுவும் இல்லாமல் - இவனுக்கு அந்த உரிமை இல்லையென்று, எங்கோ இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காளாமுகர்கள் - தீட்சிதர்கள் - குருமார்களுடைய உபதேசத்தைப் பெற்று எல்லோருக்கும் தீட்சை பண்ணிவைத்து அப்பறம்தான் பாடவேண்டுமென்று பண்ணிவைத்த காரியம்தான் இவன் செய்த புண்ணியம். ஆக இதை நன்றாக மனத்தில் வாங்கிக் கொண்டோமேயானால் திருமுறை கண்ட புராணம் கதை எப்படி வந்தது என்கிற ஆராய்ச்சிக்குப் போவோம்.

இனி 9ஆம் திருமுறையைச் சிந்திக்கவேண்டும். திருவிசைப்பா, திருப்பல்லாண்டு. இதிலே கருவூர்த்தேவர், திருமாளிகைத்தேவர், சேந்தனார் இந்த மூவரும் சித்தர்கள். ஒன்பதாந் திருமுறை பாடிய ஒன்பது பேர்களுமே இந்த மூவர் உட்பட - ராஜராஜன் காலத்திலிருந்து 2 ஆம் குலோத்துங்கன் காலத்திற்குள் முடிந்தனர். ஒரு 250 ஆண்டுகளுக்குள்ளே ஒன்பது பேர்களும் வந்து பாடியிருக்கிறார்கள். இந்தப் பாட்டு ஏன் வந்தது? திருமுறைகள் இருக்கும்போது இந்தப் பாடல்கள் ஏன் வந்தன என்று சிந்திக்கத் தொடங்கிய போது ஒரு புதுமையைக் கண்டேன் பெரிய புராணத்திலே.