பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை


இன்றைய உலகில் எந்தப் பகுதியில் வசிப்பவர்களாக இருப்பினும் நம் அனைவருக்கும் பொதுவாக ஒன்று இருப்பதை அறிய முடியும். வறியவர், செல்வர், இளையவர், முதியவர், செல்வம் மிகுந்த நாட்டில் வசிப்பவர், வறுமை மிகுந்த நாட்டில் வசிப்பவர், நாகரிகம் மிகுந்த நாட்டில் வசிப்பவர், அல்லாத பகுதிகளில் வசிப்பவர், கற்றவர், கல்லாதவர் ஆகிய அனைவரையும் பிடித்து, இன்றைய உலகில் ஆட் கொண்டிருக்கும் ஒன்றுதான் மன இறுக்கம் (Mental Tension) என்பதாகும். பெரியவர்கள் வாழ்க்கையைப் பிடித்து ஆட்டும் இந்த இறுக்கம் துரதிருஷ்டவசமாக இற்றை நாள் குழந்தைகளையும் பற்றிக் கொண்டுள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏழு வயது நிறைந்த பாலகனொருவன் கைத் துப்பாக்கி எடுத்து தன் தந்தையைப் பலமுறை சுட்டுக் கொன்று விடுகிறான். அங்கு இங்கு எனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் அந்த மன இறுக்கம் நாகரிகம் வளர வளர தானும் வளர்ந்து கொண்டு வருகிறது.

புத்தர், மகாவீரர், திருவள்ளுவர், நம்மாழ்வார், திருநாவுக்கரசர், தாயுமானார், இராமகிருஷ்ணர், இராமலிங்கர் போன்ற மாமனிதர்கள் தோன்றி