பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சித்தர்கள் 39


அதற்குத்தான் சிவவாக்கியர் சொல்கிறார். 'மகனே, நீ போய் சிவஞானியைத் தேடிப் பிடிப்பது என்பது முடியாத காரியம். ஏன்னா உன் அளவுக்குத் தானே நீ போய்த் தேடிப் பிடிக்க முடியும், உன்னைவிடக் கடந்து நிற்பவர்களை நீ எங்கே போய் கண்டுபிடிக்க முடியும்? முடியாது. அப்போ என்ன வழி? ஒரே வழிதான். எல்லோருக்கும் போடு. எல்லோருக்கும் போடுவதிலே அந்த சிவஞானி வந்து சிக்குவான்.

வருவிருந்தோ னீசனாகி வாழ்வளிக்கும் சிவாயமே

என்பதாக மிகப் பரந்துபட்ட நோக்கத்தோடு, சமுதாயம் நன்கு வாழவேண்டுமென்று கருதினார்கள் இவர்கள். மிக உயர்ந்த நிலைக்குப் போனாலும் நான் மட்டும் தானே மோட்சம் போக முடியும். அதனால் யாருக்கென்ன பிரயோசனம்?

இராமானுஜர் கோபுரத்தின் மீது ஏறிக் கொண்டு அட்டமந்திரத்தைச் சொன்னார். குரு ஏசினார், 'நரகத்துக்குப் போவே' என்று. 'ஸ்வாமி கவலைப்படவில்லை. இந்தச் சமுதாயம் முழுவதும் வீட்டுப் பேற்றைப் பெறுவதானால், நான் ஒருத்தன் நரகம் போவதற்குத் தயாராக இருக்கிறேன்' என்றார். இதுதான் இந்த நாட்டிலே தோன்றிய பரம கருணையுடைய பெரியவர்களுடைய உள்ளம் இருந்தவாறு. சித்தர்களும் அப்படித்தான். சமுதாயம் வாழ வேண்டும். கடைசி மனுஷன் மோட்சம் போறவரை எனக்கு ஒன்றும் அங்கே வேலையில்லை என்று நினைத்தவர்களே பெரியவர்கள். முன்னமேயே சொன்னோம்.