பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

121


இது போய்த் தொலைகிறது. எனது மகன் என்று எழுதாதவர்கள் மடையர்களாவதால் விட்டுக் கொடுத்து விடலாம். கோவணம் கட்டாத ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்கார னல்லவா?

இவ்வாறு புதியன புகுதலுக்கும் ஒர் அளவு உண்டு. கண்டபடி மாற்றிக்கொண்டு போனால் மொழியே வேறாகி விடும். மொழியின் விதிகளை இழுத்துப் பிடிக்காமல் அதன் போக்கில் விட்டுவிடின், கரையில்லா ஆற்று வெள்ளம் அதன் போக்கில் சென்று பல கால்களாகப் பிரிந்துவிடுவது போல மொழியும் சிதைந்து பலவாகும்.

உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் தமிழ்ப் பகைவர்கள் சிலர் - தமிழின் தனித்தன்மையைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் சிலர், மொழியியல் என்னும் போர்வையில் மறைந்துகொண்டு, தமிழ்மொழியின் பழைய உருவத்தை மறைத்துப் புதுமொழி படைக்க உரிமை யில்லை. இந்த முயற்சியில் இறங்காதீர் என அவர்களின் திருவடிகளை வணங்கி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

பழமைவாதிகள் எனச் சுட்டப்படும் எங்களிடம் தமிழ் வளர்ச்சி தொடர்பான முயற்சியை விட்டுவிடுங்கள் - வழக்கம்போல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்கள் மனப் புண்ணை இப்போது நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன். வணக்கம்.