பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

129



விளவல நாட்டின் தலைநகராகிய வனவசை என்னும் நகரைச் சுற்றியுள்ள கோட்டை மதிலையும் அதைச் சுற்றியுள்ள அகழியையும் மையமாகக் கொண்டு அடிகளார் இதை அறிவித்துள்ளார்.

அகழி மிகவும் ஆழமாகத் தாழ்ந்து - தாழ்ந்து கீழ் நோக்கிச் சென்றதால், ஆதி சேடனுடைய மணிமுடிமேல் நிற்கும் பெருமை பெற்றதாம்.

மதிலோ, மேல் நோக்கி உயர்ந்து-உயர்ந்து சென்றதால், ஞாயிற்றின் காலடியில் மிதிபடும் தாழ்வை அடைந்ததாம்.

அதாவது, அகழி மிகவும் ஆழமானது என்பதையும், மதில் மிகவும் உயரமானது என்பதையும் அடிகளார் இவ்வாறு கற்பனை செய்துள்ளார். இனிப்பாடல் வருமாறு.

“தாழ்ந்தோர் உயர்வர் என்றும் மிக உயர்ந்தோர் தாழ்வரென்றும் அறம்
சூழ்ந்தோர் உரைக்கும் உரைகண்டாம் மதில் சூழ்கிடந்த தொல் அகழி
தாழ்ந்து ஓர் அனந்தன் முடிமேல் நின்றன்று உயர்ந்து தடவரையைச்
சூழ்ந்துஓர் வரையின் உதிப்பவன் தாள்கீழ் கின்றது போய்ச் சூழெயிலே” (3:14)

என்பது பாடல். அனந்தன் = ஆதிசேடன். ஒர் வரையின் உதிப்பவன் = ஞாயிறு தோன்று மலை (உதயகிரி) என்னும் மலையிலிருந்து ஞாயிறு தோன்றுவதாகக் கூறுவது அக்கால மரபு. ஒரு மலையின் மேற்கே வாழ்ந்த பண்டைக் காலத்தார், கிழக்கேயுள்ள மலையிலிருந்து ஞாயிறு தோன்று வதாகக் கூறினர். கடற்கரையைச் சார்ந்து வாழ்ந்தவர்கள் ஞாயிறு கடலிலிருந்து தோன்றுவதாகக் கூறினர். இந்தக் கால நிலைமை வேறு.