10
வேண்டுமானால் என்னைப் பாரும்; மேலே ஒரு துண்டு, கீழே ஒரு துண்டு - இவற்றைத் தவிர, வேறு ஏதாவது நான் அணிந்து கொண்டிருக்கிறேனா?”
“இல்லை…”
“ஒரே ஒரு கெடிலாக் காரைத் தவிர, வேறு கார் ஏதாவது நான் வைத்துக் கொண்டிருக்கிறேனா?”
“இல்லை…”
“உள்ளூரிலும், ஊட்டியிலும் இருக்கும் இரண்டு பங்களாக்களைத் தவிர, வேறு பங்களாக்கள் ஏதாவது உண்டா?”
“ஊஹூம்…”
“வேளைக்கு ஒரு பவுண்டு ஓட்ஸ் சாதம், தாகத்துக்கு நாலே டம்ளர் ஆரஞ்சு ஜூஸ், சிற்றுண்டிக்குக் கொஞ்சம் நிலக் கடலை, குடிக்க இரண்டே டம்ளர் வெள்ளாட்டுப் பால் - இவற்றைத் தவிர, வேறு ஆகாரம் ஏதாவது நான் அருந்துவதுண்டா?”
“ஏது!”
“காந்தியடிகளின் ‘பிரம்மசரிய’த்தை நீரும்தான் படித்தீர்; நானும்தான் படித்தேன் - ஆனால் முதல் தாரம் இறந்ததும், நீர் இரண்டாந்தாரம் கல்யாணம் செய்து கொண்டீர்; நான் அப்படிச் செய்து கொண்டேனா?”
“கிடையாது…”
“உமக்காவது நாலு குழந்தைகள் இருக்கின்றன; எனக்கு ஒரு குழந்தையாவது உண்டா?”
“கிடையவே கிடையாது!”
“அப்படியிருக்கும் போது, நீரும் என்னைப் போலவே ஏன் ஐயா, எளிமையாயிருக்கக் கூடாது?”
“இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத்தான் இருக்கிறது; எல்லாவற்றுக்கும் கொடுத்து வைக்க வேண்டாமா?”
“அதென்னய்யா, அது! எளிமையாயிருக்கக்கூடக் கொடுத்து வைக்க வேண்டுமா, என்ன?”
“பின்னே, கூத்தாடி வேண்டுமானால், பிழைப்புக்காக ராஜா வேஷம் போடலாம்; ராஜாவே, ராஜா வேஷம் போட்டால் நன்றாயிருக்குமா? - நான்தான் பிறக்கும் போதே, ஏழையாய்ப் பிறந்து விட்டேனே!”