பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் டாக்டர் மு. வரதராசன் ஊர்க்குருவிகள் இரண்டு, ஆணும் பெண்ணுமாய்க் கூடு கட்டுகின்றன. எங்கெங்கோ கண்ட புல், கொடி முதலியவற்றை யெல்லாம் கொண்டுவந்து சேர்க்கின்றன. ஆனால் கட்டும் கூடு நிற்கின்றதா, இல்லையா என்று அவை ஆராய்ந்து பார்ப்பதில்லை. உயரமான பகுதியில் இறவாணம், விட்டம் முதலியவற்றைச் சார்ந்த இடங்களில் கட்டுகின்றன. அவை கூடு நிற்கக்கூடிய இடமா என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. நிற்கக்கூடிய இடமாக இருந்தாலும் வீட்டில் வாழும் மக்கள் இந்த முயற்சியை ஆதரிக்கின்றார்களா, எதிர்க்கின்றார்களா என்பதையும் எண்ணிப் பார்ப்பதில்லை. நேற்று மாலை வரையில் கொண்டு வந்து வைத்த புல்லும் கொடியும் குச்சியும் இன்று காலையில் கீழே விழுந்திருக்கக் காரணம் என்ன என்று சிந்தித்துப் பார்ப்பதில்லை. அவற்றின் கண் எதிரே, வீட்டுக்காரர் கோல் எடுத்து அந்தப் புல் முதலியவற்றைக் கலைத்துக் கீழே தள்ளுவதையும் ஆராய்வதில்லை. மறுபடியும் மறுபடியும் குருவிகள் அதே இடத்தில் அந்த முயற்சியையே விடாமல் செய்கின்றன. தம் முயற்சிக்கு இவ்வளவு தடையும் எதிர்ப்பும் இருத்தலை அறிந்து வேறு இடத்திற்குப் போக வேண்டும் என்று அவை முயல்வதில்லை. முட்டை இடுவதற்கு உரிய நாளும் நெருங்குகிறது. அரைகுறையாக அமைந்த அந்தக் கூட்டிலேயே பெண்குருவி முட்டையும் இட்டு விடுகிறது. முற்றுப் பெறாத கூடு, அடிக்கடி கலைந்து விழுந்த கூடு ஆகையால், முட்டைகளால் அங்கே தங்க முடிவதில்லை. அவை கீழே விழுந்து உடைகின்றன. அப்போதும் அந்தக் குருவிகளுக்கு உணரும் ஆற்றல் - முன்னும் பின்னும் நிகழ்ந்தவற்றைச் சேர்த்து எண்ணிப் புதிய முடிவுக்கு வரும் ஆற்றல் இல்லை மறுபடியும் அதே முயற்சியை அந்த இடத்திலேயே செய்கின்றன; மறுபடியும் தோல்வியே உறுகின்றன. கூடு கட்டவும் முட்டையிடவும் மட்டும் கற்ற இயற்கைக் கல்வி தவிர, காலத்தையும் இடத்தையும் சூழ்நிலையையும் உணர்ந்து முயற்சியை மாற்றும் அறிவு அவற்றுக்கு இல்லை, பாவம்!