பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 அஞ்சவில்லை. இணையற்ற தைரியத்துடன் தம் வழியே சென்றார். நான் அமரன்; சாகமாட்டேன்!' என்றார்; அப்படியே ஆகவும் ஆனார். தமிழிலக்கியத்தில் என்றும் அழியாத ஸ்தானம் கிடைத்து விட்டது. அவருக்கு. தமிழை மனப் பூர்வமாகக் காதலித்தார், அவர் 'தமிழ்தான் சிறந்த பாஷை, அதைவிடச் சிறந்த பாஷை இவ்வுலகில் இருக்கக்கூடாது' என்றும் கருதினார். அவர் சொல்லுவதைக் கேளுங்கள்: 'தம்பி, நான் ஏது செய்வேனடா?-தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்த முண்டாகிறது; தமிழனைவிட மற்றொரு ஜாதியான் அறிவிலும், வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை; தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது!' வெறும் உபசாரமா இது? மற்றவர்கள் தம்மைப் புகழ்ந்து கொண்டாட வேண்டுமென்பதற்காகவா அவர் இதைச் சொல்லி யிருப்பார்? - அல்ல, அப்படி யிருக்க முடியாது. தமிழ்மீது உண்மை யான பக்தி இருப்பவர்களுடைய இதயத்தின் ஆழத்திலிருந்துதான் இத்தகைய வார்த்தைகள் வெளிவர முடியும். தமிழ் அப்போதிருந்த நிலைமையைப் பார்த்து அவர் துடிக்கிறார், 'சென்றிடுவீர் எட்டுத் திக்கும்' என்கிறார்; 'கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!" என்கிறார்; யாரோ ஒரு பேதை, 'மெல்லத் தமிழினிச் சாகும்' என்ற கூறிவிட்டானாம். அதைக் கேட்கத் தமிழ்த் தாய் துடிப்பதாக அவர் சொல்லுவது, உண்மையில் அவர் உள்ளத்தின் துடிப்பன்றோ? சமீப காலத்துப் புலவர்கள் பலர் தமிழைச் செந்தமிழ்' என்றும் 'வண்டமிழ்’ என்றும் கிளிப் பிள்ளையைப் போலச் சொல்லி வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களில் எத்தனை பேர் தமிழின் பெருமையை உண்மையிலேயே உணர்ந்து அப்படிச் சொன்னார்கள் என்பது சந்தேகம்! பாரதியார் இதற்கு விதி விலக்கு. தமிழ்த் தெய்வத்தின் எல்லை யற்ற பேரழகிலே ஈடுபட்டு மெய்ம்மறந்து நின்றவர் அவர். 'சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!' என்பது அவருடைய முடிவான கருத்து.