கடவுளைப் படைத்த மனிதன் அறிஞர் கா. அப்பாத்துரை முன்னுரை கடவுளைப் படைத்த மனிதன்!-மேலீடாகப் பார்ப்பவருக்கு இந்தத் தலைப்பு மலைப்பைத் தரக் கூடும் 'மனிதனைப் படைத்த கடவுள்' என்ற தலைப்புத்தான் தவறித் தலைமாறி விழுந்துவிட்டதோ என்றுகூடப் பலர் எண்ணலாம்! உண்மை இது அன்று. கடவுள் என்ற கருத்து மனிதனுக்கு மட்டும்தான் உண்டு. எந்த விலங்கோ, பறவையோ மரஞ் செடி கொடியோ கடவுளை வணங்கியதில்லை. அவற்றுள் எதுவும் கடவுளை அறிவதும் கிடையாது; ஆராய்வதும் கிடையாது. உயிருள்ள பொருள்களின் நிலையே இது என்றால், உயிரில்லாத இயற்கையின் நிலையை எடுத்துக் கூற வேண்டுவதில்லை இயற்கையில் மனிதன் இறைவனைக் காணக் கூடும்; ஆனால் இயற்கை இறைவனைக் காண்பதில்லை! இறைவனை மட்டுமென்ன, மற்ற உயிர்ப் பொருள்களையோ, உயிரற்ற பொருள்களையோ காணும் ஆற்றல் கூட அதற்குக் கிடையாது. கடவுளை அறிபவனும், அறிந்து பிறருக்கு எடுத்துக் கூறுபவனும் மனிதனே கடவுளைக் காட்டத் தக்கவனும் காட்டும்போது உணரத் தக்கவனும் மனிதனே. கடவுளைப் பற்றி ஆராய்பவன். கடவுள் உண்டு என்று கூறுபவன், கடவுள் இல்லை என்று மறுப்பவன் - எல்லாம் மனிதன் தான். கடவுள் இப்படிப்பட்டவர் அல்லர் அப்படிப்பட்டவர் என்று வாத எதிர்வாதம் செய்பவனும் மனிதனல்லாமல் வேறு யாரும் இல்லை. சுருக்கமாகச் சொன்னால், கடவுட் கருத்து மனிதனின் படைப்பு. இந்தப் படைப்பில் மனிதனைத் தவிர வேறு எவருக்கும் எதற்கும் பங்கு கிடையாது அது மனித இனத்தின் தனி உரிமைப் படைப்பு.
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/151
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை