பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 தமிழன்னைக்குத் திறம்பட, மேன்மையும் கெளரவமும் பெருக, ஊக்கத்தோடு இடைவிடாது தொண்டாற்றிவந்தார்கள் டி.கே.சி. நடனக்கலை இவர்களது ஆதரவினாலும் பிரசாரத்தினாலும் மேம்பாடுற்று தக்க நிலை அடைந்தது. தமிழிசை யியக்கம் இவர்களது வசீகரமான சொல்லாற்றலால், நிலைத்து நின்றுவிட்டது. இளந்தமிழ்க் கவிஞர்களும் இளம் எழுத்தாளர்களும் ஓர் உறுதியான பற்றுக் கோட்டினைப் பெற்றார்கள். தமிழிலக்கிய வளர்ச்சியில் இவர்களது அடிச்சுவடு ஆழ்ந்து பதிந்து பிற்காலத்தார்க்கு வழிகாட்டியாய் அமைந்தது. புன்னகையாற் பொலிந்து விளங்கும் முகமும், சிரிப்புத் தாண்டவமாடும் நயனங்களும், அவர்கள் உள்ளத்திலிருந்து பொங்கி வரும் இனிய மென்மொழிகளும் என்றும் மறக்கொணாத காட்சிகள். அவர்களது விருந்துபசரணை நம்மை ஸ்வர்க்கலோக வாசியாகச் செய்துவிடும் இயல்புடையது. தன்னிகரில்லாது சிறந்து மேம்பட்ட கவிதைகளிலே தான் அவரது உள்ளம் படர்ந்தது. கவிதையை மதிப்பிடுதலில் அவரோடு ஒப்பிடத்தக்கவர் அரியர். பண்டித படாடோபங்களை முற்றும் வெறுத்தனர். அவர்களை இகழ்ந்து நகையாடுவதிலும் சலிப்பற்றவர். வசன நடை, கவிதையியல்பு, கல்வி, விஞ்ஞான சாஸ்திரங்கள், வைத்தியம், எஞ்ஜீனியரிங் முதலியவை பற்றி அவரது கொள்கைகள் ஒரு தனி ரகத்தை'ச் சார்ந்தவை. இக்கொள்கைகளைப் பிரசங்க வாயிலாக வெளியிடுவதில் சிறிதும் தயங்காதவர். தமிழ் - இலக்கியவுலகிலே ஒரு பெரிய சக்திமானாக அவர் விளங்கினர். அவரது ஆன்மா சாந்தி பெறுக, அவரது ஞாபகம் தமிழ் நாட்டில் பசுமை பூத்து விளங்குக. அவர் காட்டிய நன்னெறிகளைப் பின்பற்றி இலக்கிய வாணர்கள் மேலும் மேலும் சிறந்து தமிழ்த் தொண்டாற்றுக! - ஜனவரி 1955