25 இறந்தவுடன் மீதியிருந்த சொத்து அவ்வளவும் கடன்காரர்களுக்குச் சரியாகிவிட்டது. மகனும் மகளும் ஜீவனத்திற்கு வகையின்றி, உதவி செய்ய முன்வருகிறவர்களுமில்லாமல் அனாதைகளாகத் தெருவிலே நின்றார்கள். திருநாவு தந்தையின் உபதேசங்களில் ஊறி, யாரிடமும் போய் உதவி கேட்கத் தகுதியற்றவனாகி விட்டான். வயதடைந்த திலகமோ வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் இருந்தாள். இன்னும் இரண்டொரு மாதங்களில் இருவரும் ஒன்று வீட்டை விட்டு வெளியேறிப் பிச்சை எடுக்க வேண்டும்; அல்லது வீட்டுக்குள்ளேயே இருந்து பட்டினிக்குப் பலியாகிவிடவேண்டும் என்ற நிலைமை வந்துவிட்டது. இந்தச் சமயத்தில்தான் குற்றாலலிங்கம் பிள்ளை அந்த ஊருக்குச் சுகாதார அதிகாரியாக வந்து சேர்ந்தார். அவர் திலகம், திருநாவு இருவரையும் பற்றிக் கேள்விப்பட்டு ஊராரிடம் பேசினார். சிவஞானம் பிள்ளை உயிரோடிருந்தபோது கிராமப் பஞ்சாயத்து சபைத் தலைவர் சுந்தரம் பிள்ளையை, 'சூழ்ச்சிக்காரன், சூதும் வாதும் செய்கிறவன்' என்று தூற்றிக் கொண்டிருந்தார் சுந்தரம் பிள்ளை அந்த விரோதத்தையெல்லாம் மறந்து குற்றால லிங்கம் பிள்ளையுடன் ஒத்துழைக்க முன்வந்தார். இருவரும் கலந்து பேசினர். கடைசியாகக் குற்றால லிங்கம் பிள்ளை சென்னையிலிருந்த தமது நண்பன் கதிரேசனுக்குக் கடிதம் எழுதினார்: 'திலகத்தை ரதி ரம்பை என்று வர்ணிக்க முடியாது. ஆனால் அழகில்லை யென்றும் யாரும் சொல்ல மாட்டார்கள் முகத்திலே நல்ல களை இருக்கிறது. தற்சமயம் அவள் நெஞ்சிலிருக்கும் கவலை அதன் மேல் படர்ந்து அதைப் பிரகாசிக்க விடாமல் செய்திருக்கிறது உன்னுடைய வீட்டுத் தலைவியாக வருவதற்கு வேண்டிய எல்லாத் தகுதிகளும் அவளிடம் இருக்கின்றன. நீ நேரில் வந்து பார்த்தால் உடனே அவளை மணக்க இசைந்து விடுவாய்' என்று அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். சென்னையிலிருந்து கதிரேசன் வந்தான் திலகத்துக்காக மணம் பேசக்கூட ஆளில்லை. சுந்தரம் பிள்ளையின் மனைவிதான் முன்னின்று பேசி மணம் திகைய வைத்தாள். ஊராரும் பழைய கசப்பை யெல்லாம் மறந்து உதாரத்துடன் திலகத்தின் குடும்ப விளக்கை ஏற்றி வைக்க ஒத்துழைத்தார்கள். மணம் நல்ல படியாக நடந்தேறியது.
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/27
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை