பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

மனிதன் எங்கே செல்கிறான்?



திருவள்ளுவர். அத்திருவள்ளுவர் பெயரால் நாடெங்கும் நல்ல கழகங்கள் பணியாற்றி வருகின்றன. அவற்றுள் இச்செங்கம் திருவள்ளுவர் கழகமும் ஒன்றாகும். தொடங்கிய இரண்டாண்டுகளுக்குள், இக்கழகம் பல அரும்பணிகளைக் செய்து உள்ளது; ஆண்டுதோறும் மாநாடுகளும், வாரந்தோறும் வகுப்புகளும் நடத்தி, மக்கள் உணர்வைத் தூண்டி உள்ளங்களைத் திறக்கின்றது, வள்ளுவரைப் பற்றியும், அவர்தம் வாய்மொழியைப் பற்றியும் மக்களுக்கு உணர்த்தி அவர்களை ஓரளவு தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராக்கி வருகின்றது. ஆம்! இத்தகைய அரும்பணிக் கழகத்தில் இரண்டாம் ஆண்டு வள்ளுவர் விழா இன்று நடைபெறுகிறது. இவ்விழா நிகழ்ச்சியைத் தொடங்கு முகத்தான் திறந்து வைக்க வேண்டும். நான் இப்பெரும்பணியாற்ற வல்லேனல்லேனாயினும், அன்பர்தம் ஆணையும் ஆதரவும் உடன்கொண்டு, அவ்வாணை வழிக் கடனாற்ற முன்னிற்கின்றேன். இம்மாநாட்டுத் திறப்பு மூலம் மக்கள் மனங்கள் திறப்படைந்து மாநிலம் வாழ ஒரு சிறிதேனும் வழியும் வாய்ப்பும் அமைய வேண்டும் என்பதே என் அவா! ஈண்டுக் குழுமிய தமிழன்பர்கள் அத்துறையில் ஆவன செய்வார்களாக!

'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு,' என்று நம்மையும் நாட்டையும் வானளாவப் புகழும் வரையில் தமிழன் முன்னேறி விட்டான் என்பது உண்மைதான். ஆனால், அவ்வள்ளுவர் உரைத்தது என்ன என்று அறிந்து அதன்படி நடக்க நினைக்கின்றவர்கள் எத்தனைப்பேர் இந்நாட்டில் உள்ளனர்? 'கற்க கசடற கற்பவை; கற்றபின் நிற்க அதற்குத் தக,' என்ற வள்ளுவர் வாய்மொழிப்படியே அவர் நூலைக்கற்று, அதற்கேற்ப நடக்கின்றவர் யாவர்? ஊருக்கு உபதேசியாக வள்ளுவரைப்பற்றி வானளாவப்