பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

மனிதன் எங்கே செல்கிறான்?



டுக்கு நாடு காணப்படும் போரும் பிணக்கும் பிற கொடுமைகளும். இவற்றை நீக்க வழியில்லையா? ஏன் இல்லை? உண்டு. எக்காலத்தும் உண்டு. அது தான் வள்ளுவர் வாக்கை வாழ்விடைக் கொண்டு வருதல்.

வள்ளுவரின் நாகரிகம் தலைசிறந்தது. மறந்தும் பிறன் கேடு சூழாப் பெருநெறியே அவர் வகுத்த அறநெறி.

'எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானும்

மாணாசெய் யாமை தலை.'

என்பது அவர் வகுத்த அறம். அவர்தம் அறமும், அறிவும், தவமும், வாய்மையும், பிற யாவுமே மற்றவர்களுக்கு மனத்தாலும் தீங்கு எண்ணாச் செம்மை வாழ்விலேயே சென்று முடியும்.

'மனத்துக்கண் மாசில னாதல்; அனைத்தறன்;

ஆகுல நீர பிற.'

என்ற குறளும்,

'அழுக்காறு அவாவெகுளி யின்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்'

என்ற குறளும், மனிதன் மன அழுக்கற்று மற்றவர்மேல் பொறாமை கொள்ளாது, தேவைக்குமேல் கொள்ள வேண்டுமென்ற பேராசையையும், அதன் வழித்தோன்றும் கோபம் கொடுஞ்சொல் என்ற இவற்றையும் நீக்க. வேண்டும் என்ற உண்மையையுமன்றோ வலியுறுத்துகின்றன? எனவே, அறநெறியென்பது மற்றவர் செல்வம் கண்டு மனத் தழுக்கில்லாதிருப்பது; பிறர் பொருளைத் தமதாகக் கொள்ள விரும்பும்-வாழ்வின் தேவைக்கு அதிகமாகச் சேர்த்து வைக்க விரும்பும்-அவர்வை அறுப்பது; அவற்றின் மூலம் பற்றி வரும் பிற கொடுமைகளை நீக்குவது என்பது நன்கு புலனாகின்றதன்றே!