பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திறப்புரை

105



இதைப் போன்றேதான் வள்ளுவர் அறிவையும் விளக்குவார்; அறிவென்பது ஏதோ தேர்வில் வெற்றி பெற்றுச் சிறப்பதென்பது வள்ளுவர் கருத்தன்று.

'அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின் நோய்

தன்னோய்போல் போற்றாக் கடை?'

என்ற அவர்தம் வாய்மொழி எதை விளக்குகிறது? பிறர் துயரைத் தம் துயரெனக் கருதி, உடுக்கை இழந்தவன் கைபோலத் தாமே வலியச் சென்று மற்றவர் துன்பம் துடைப்பவரல்லரோ அறிவுடையராவர்? அவரே எல்லாம் உடையவர் ஆவர். மற்றல்லாதார் யாரோ!

வள்ளுவர் தவம் என்று காட்டுவதும் இக்கருத்துப் பற்றியதேயாகும். தனக்கு வரும் துன்பத்தைத் தாங்குவதோடு, தான் பிற உயிர்களுக்குத் தீங்கிழையா திருத்தலே தவம் என்பது அவர் தம் அசைக்க முடியாக் கொள்கை. காடு திரிந்தும் தாழ்சடை வைத்துக் காவி உடுத்தும் வாழ்தலைத் தவம் என்று அவர் கருதவில்லை உலகம் பழிக்கும் கொடுமைகளை ஒழிப்பதே அவர் கண்ட தவம். தமக்குத் தீங்கிழைத்தானுக்கும் ஊறு செய்யா திருப்பதே அவர் உணர்ந்த தவம்.

'உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

அற்றே தவத்திற்கு உரு.'

என்பது அவர்தம் வாக்கு. இவற்றிற்கெல்லாம் மேலாக அவர் வாய்மைக்குத் தரும் விளக்கம் அமைகின்றது. வாய்மை என்றால் கண்டதைக் கண்டபடியே சொல்லுதல் என்று தான் அனைவரும் அறிவர். கண்டதை ஓரளவு. மாற்றினும், அது இன்றைய நாகரிக உலகத்திற்கும் பொய்யாகத்தான் காணப்படும். ஆனால், வள்ளுவர் கண்டதைக் கண்டபடி சொல்வதை வாய்மை என்று கூறவில்லை; மற்றவர்களுக்குத் தீங்கிழைக்காத சொற்களையே வாய்மையென்கின்றார்.

7