பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

மனிதன் எங்கே செல்கிறான்?


ஆம்! அவ்வாறாய நல்ல அறிவு பெற்ற உள்ளந்தான் நல்லதையும் தீயதையும் பகுத்தறிய முடியும்.

நாட்டில் இப்போது நன்மை தீமைகளை ஆராய்வதை விட்டு வேறு பலவற்றைப் பகுத்தறிவதாகக் கூறிக் கொள்ளும் மாக்கள் இனம் பெருகிக் கொண்டே வருகின்றது. அவர்களை அணுகலாகாது என்று அன்றும் இன்றும் அறம் உணர்ந்த நல்லவர்கள் அறிவுறுத்திக் கொண்டே தான் வருகிறார்கள். ‘நல்ல தன் நலனும் தீய தன் தீமையும், இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர்’, என்று எச்சரிக்கின்றார் சங்ககாலப் புலவர் ஒருவர். எனவே, மனிதன் பெற்ற அறிவின் பயன் மற்றவர். வாழத்தான் வாழ்தல் என்பதில் முடிவதாகும்.

இவ்வாறாய பகுத்தறிவே மனிதனை மற்றவற்றின் தலைவனாக்கிற்று. அவன் தன் ஆய்வு உள்ளத்தால் உலக உயிர்களின் நன்மை தீமைகளை மட்டும் ஆராய்வதோடு நின்று விடவில்லை. ஐம்பூதங்களின் அசைவு அமைப்பு முதலியவற்றால் உண்டாகின்ற நலம் கேடு இவற்றை ஆராயத் தொடங்கினான். அந்த ஆராய்ச்சித் துறையில் சிறந்த விஞ்ஞான வளர்ச்சி இன்று அவனை ஐம்பூத ஆட்சியாளனாக்கி விட்டது. கடலைக் கட்டிக் காத்து, வான் வழிப் பறந்து, நிலம் அகழ்ந்து, நீர் குடைந்து, பல அற்புதச் செயல்களை ஆக்கும் அளவுக்கு மனிதன் முன்னேறிவிட்டான். மனிதன் முயன்றால் ஆகாத காரியம் ஒன்றில்லை என்று சொல்லும் அளவுக்கு அவன் முன்னேறிவிட்டானே ?

ஆம்! அவன் முன்னேறிவிட்டது உண்மைதான். ஆனால், அதே வேளையில் அவ்வளவு முன்னேற்றத்திற்கும் அடிப்படைக் காரணமாகிய நல்லறிவை மறந்து தன் மனிதத் தன்மையை இழக்கும் அளவுக்கு அவன் முன்னேற்றம் சென்றுவிட்டது. ‘மனிதன் மீனென