பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

மனிதன் எங்கே செல்கிறான் ?


கலாசாரம் என்பது, ஏதோ ஏட்டில் எழுதி வைப்பதன்று பாட்டில் பாடப்படுவதன்று. அது நாட்டு வாழ்க்கையில்-மனிதப் பண்பில்-மலர்வது. காட்டில் வாழும் மிருக உணர்ச்சிக்கும் நாட்டில் வாழும் மனிதப் பண்பாட்டிற்கும் வேறுபாடு காட்டத் தோன்றுவதே கலாசாரமாகும். மனிதன் மனிதனாக வாழவேண்டுமேயன்றி, மனித யந்திரங்களாகவோ, மிருகங்களாகவோ வாழலாகாது என்பது தலைவர்கள் காட்டிய உண்மை. மனிதன் மனிதனாக வாழ்தலே கலாசாரம். அக்கலாசார அடிப்படை பற்றியே '‘யாதும் ஊரே யாவரும் கேளிர்,’என்ற கணியன் பூங்குன்றனரது கருத்தும் எழுந்தது. உலக உயிர்களெல்லாம் ஒன்று என்று எண்ணும் கலாசாரம் மலர்வதற்கு அப்பேராசிரியரே வழியும் காட்டியுள்ளனர். ‘யாதும் ஊரே’ என்ற அடியினை ஒட்டி வரும் பிற அடிகளும் நினைத்தற்பாலனவே.

‘யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன:
சாதலும் புதுவதன்றே ? வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே ; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே.’

என்று கூறிப் பின் வாழ்வுப் பாதை செல்லும் வழியையும் காட்டுகின்றார் புலவர். உலகமே சிறந்த சோலையாகக் கொண்டு, அதில் வாழும் வேற்றுமையற்ற உரிமைப் பறவையாக மனிதன் விளங்க வேண்டுமென்பதே அவர் தம் குறிக்கோள். அதைத்தான் யாதும் ஊரே ; யாவரும் கேளிர் என்று காட்டினர். பின் அந்த நிலை பெற வழியினையும் அவரே வகுத்துக் கொடுக்கின்றார்.

மனிதப் பண்பாடு மற்றெவற்றினும் மேலானது. அந்தப் பண்பாடுதான் அவனை மிருகத்திடையிருந்து வேறு பிரிக்கின்றது. அவ்வேறுபாட்டினாலேதான் அவன்