பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழன் ஒரு சமரச ஞானி

39


சிந்தை திரிந்து, தான் வாழும் பூஞ்சோலையாகிய பூமியைச் சுடுகாடாக்கத் திட்டமிடுகின்றான். இக் கொடுமையை நீக்க வழியில்லையா? ஏன் இல்லை? உண்டு! உண்டு ! உண்டு !

இன்றைய தமிழன் எத்தனையோ வகைகளில் மாறுபட்டிருந்தாலும், பழந்தமிழ் நாட்டில் உலகை வாழ வைக்க வழி காட்டிய அருள் உணர்வாளர் பலர் வாழ்ந்திருக்கின்றனர். ஏன் ? இடைக்காலத்தும் இன்றுங் கூடப் பண்பட்ட நல்லுளம் வாய்ந்த பல பெரியர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் - வாழ்கின்றார்கள். அவர்கள் உலகம் வாழ வழி காட்டிகளாய்ப் பல உண்மைகளை உரைத்துச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் உரைகளை ஏட்டளவிலன்றி, வாழ்வில் மேற்கொண்டால் உலகம் வாழும் ; உயிர்கள் ஓங்கும்!

அப்படி என்ன அவர்கள் அன்றும் இன்றும் கூறி விட்டுச் சென்றார்கள் ? அவர்கள் வகுத்த வழி யெல்லாம் சமரச சன்மார்க்க வழிதான். ‘எல்லாரையும் ஒத்து நோக்கும் ஒருமை உணர்வே மனிதனை மனிதனாக்கும் உயர் மருந்து’ என்பதே அவர்கள் அறிந்த உண்மை. மனிதனை மட்டுமன்றி, எல்லா உயிர்களையுமே ஒத்து நோக்க வேண்டுமென்பது அவர்தம் அறவுரை, உலகம் இதை எண்ணிப் பார்க்கட்டும்.

தமிழ் நாட்டில் அன்றும் இன்றும் எத்தனையோ குறைபாடுகள் இல்லாமல் இல்லை. மாறுபட்டுப் போராற்றுதலும் மனம் கெட்டுக் கொடுமை புரிதலும் தமிழனுக்கு மட்டும் விதி விலக்கானவை அல்ல. எனினும், அத்தகைய கொடுமைகளுக்கு இடையிடையே அறிஞர்களின் அறவுரைகள் மணி விளக்கங்களாய் நின்று, அத்தமிழர் தம் பெருமையை நன்கு விளக்குகின்றன.