பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழன் ஒரு சமரச ஞானி

41


யார்? வீடு நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்த பாரி, தேரிலிருந்தே வழியில் முல்லைக்கொடி வாடுவதைக் கண்டான். பற்றிப் படரக் கொழு கொம்பின்றித் தாவித் தவிக்கும் அக் கொடியின் வாட்டம் அவன் உள்ளத்தைச் சுட்டது. ‘கொடியும் வருந்தும்’ என்று கூறிற்று அவன் உள்ளம். அரண்மனை சென்று ஆட்களை அனுப்பி அதற்குக் கொழு கொம்புகளை நடச்சொல்லும் அளவுக்கு அவன் உள்ளம் வழிகாட்டி மேலே செல்ல அவனை விடவில்லை. அவன் அருள் உள்ளம் அத்துணை நேரங் கூட அக்கொடி வாடுதல் தகாத ஒன்று என்று உணர்த்திற்று. சுற்றுமுற்றும் பார்த்தான். கொழு கொம்பாக நாட ஒன்றும் கிடைக்கவில்லை போலும்! தான் ஏறிய தேரின் குதிரைகளை அவிழ்த்து விட்டான். தேரை அருகில் சேர்த்தான். ‘முல்லையே, நீ இத்தேரையே பற்றாகப் பற்றி வளர்க!’ என்று வாழ்த்தி வீடு சென்றான். இச் செயல் மூலம் சமரச உணர்வு என்பது மனித இனத்தோடு மட்டுமன்றி ஓரறிவுடைய உயிர்களாகிய தாவரங்கள் வரையில் தமிழர் உள்ளத்தே தழைத்து நின்றது என்பது புலனாமன்றோ ?

இஃது ஓர் இலக்கியம். இவ்விலக்கியத்துக்கே இலக்கணம் கண்டார், என்றும் வாழும் வளமார் நூல் செய்த வள்ளுவர். உயிர் என்னும் போது அவற்றிடையிலே வேறுபாடு உண்டோ என வினவியது அவர் உள்ளம். உள்ளம் வினவியதை வாய் பாட்டாக வாரி, வழங்கிற்று. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ; சிறப்பு ஒவ்வா செய் தொழில் வேற்றுமையான்,’ என்று அவர் செம்மைக் கரம் தீட்டியிருக்கும். ஆம்! எல்லா உயிரையும் ஒத்து நோக்கும் சமரச ஞானியாய்த் தமிழன் விளங்கினான் என்பதற்கு இதனினும் வேறு சான்றும் வேண்டுங்கொல்!

3