பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படிப்பது எதற்கு ?

51


கத்தையும் பண்பாட்டையும் காற்றில் பறக்க விட்டோம். அன்று சென்னையில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியின் '‘பஸ்’ஸில் வந்த அந்த இளம் பெண்கள், ‘மூர்மார்க்கட்’டைத் தாண்டுவதற்குள் கல்லூரியில் பயிலும் மேதகு மாணவர்களால் பட்ட அல்லலைக் கண்டவர்கள், ‘போதும் கல்லூரிப் படிப்பு நாட்டுக்கு!’ என்று கூறாது விடமாட்டார்கள். அவர்கள் உண்மையில் நாட்டுக்கு நல்ல பெயர் தேடித் தருபவர்களாய் இருந்தால். ஆக இன்றைய கல்வி நாட்டில் இவ்வாறு கெடுவானேன்?

நாட்டையாளும் நல்ல பேரமைச்சர் திரு. ஜவகர்லால் நேரு முதல் சாதாரண உத்தியோகத்தர் வரையில், ‘மாணவர் தரமும் ஒழுக்கமும் மங்கிவிட்டன !’' என்று வருந்திக் கண்ணீர் விட்டுக் கூறுகின்றனர். ஆண்டுதோறும் பல பல்கலைக் கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களில் கவர்னர்களும் பிறரும் ஒழுக்கம் பற்றியும் பண்பாடு பற்றியும் பேசாமல் இல்லை. எல்லாம் பேச்சோடு பேச்சாகச் சென்று மறைகின்றனவேயன்றி, வாழ்வில் பயன் தரவில்லை. காரணம் என்ன?

ஆரம்பக் கல்வி தொடங்கி, கல்லூரிக் கல்வி வரையில் ஆண்டுதோறும் எத்தனையோ மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு நூலுக்குப் பதில் மற்றொரு நூல், ஒரு வகுப்புக்குப் பதில் மற்றொரு வகுப்பு, ஒரு மொழிக்குப் பதில் மற்றொரு மொழி என்று இந்த வகையாக மாறுதல்களைக் காண்கிறோமேயன்றி, அடிப் படையில் மனிதனை மனிதனாக்கும் கல்வி நாட்டில் மலரவில்லை. ‘ஆங்கிலேயன் காலத்தில் அவன் நம்மை அடிமையாக்கும் வகையில் கல்வித் திட்டத்தை வைத்திருந்தான் ; அதை மாற்ற வேண்டும்,’ என்று பலரும் பேசுகின்றனர். ஆனால், அந்த மாற்றத்தின் வழி உண்-