பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

மனிதன் எங்கே செல்கிறான்?


யாயினும், ஒழுக்கத்தால் மேம்பட்டவனை அது குறிக்கும் என்றால் தப்பாகாது. யாவரும் அதை ஏற்றல் வேண்டும். எனவே, கல்வி மக்களுக்கு ஒழுக்கத்தை உண்டாக்கித் தருவதற்கேயாகும் என்பது திட்டமாகத் தெரிகின்றது.

இவ்வாறு கல்வி பற்றி வரையறுத்த விளக்கம் உள்ள நாட்டில், கற்பாரிடம் ஒழுக்கம் இல்லாத காரணம் யாது? கள்ளமறியாப் பிள்ளை உள்ளங்களைக் குறை கூறுவதினும் அவ்வுள்ளங்களை உருவாக்கும் பெரியவரைத் தான் நினைத்துப் பார்க்க வேண்டும். ஆசிரியர்களிலும் எத்தனையோ நல்லவர்களும் ஒழுக்கமுடையவர்களும் இருக்கிறார்கள். இருந்தும், இந்த நிலையா? ஏன்? ஆம்! நாட்டுக்கல்வி அடிப்படையிலேயே அழுக ஆரம்பிக்கின்றது. செயலாற்றும் தலைவர்கள் செம்மை நிறைந்த உள்ளத்தோடு பணியாற்ற வேண்டும். கல்வியை உருவாக்குவதில் ஒழுக்கக் கல்வி இடம் பெறல் வேண்டும். நல்லவர்களும் ஒழுக்கமுடையவர்களும் கல்வித் துறையை நடத்த முன் வரவேண்டும். உள்ளத்தே கள்ள உணர்வும், வேறுபட்ட வெளியுணர்வும், மக்களை மாக்களாகக் கருதும் கயமையையும் கல்வி நிலையங்களிலிருந்தும், அத்துறைத் தலைவர்களிடமிருந்தும் விடை பெற வேண்டும். அரசாங்கம் ஒழுக்கக் கல்வியை ஓம்பும் வகையில் திட்டம் அமைக்க வேண்டும். அடிக்கடி கல்வியை மாற்றும் திட்டம் கைவிடப்படல் வேண்டும். ஆகும் செலவோடு அதிக செலவாகப் பல ‘கமிட்டி’களை ஏற்படுத்தி, அவர்களைச் சுற்றிவரப் பணித்து, பல செய்து, பின் அவர்கள் கூறுவது பற்றியே சிந்தியாது விடுதல் நல்லதாகாது. ‘தலைவர் திருந்தினால் தரணி திருந்தும்,’ என்பது இன்றைப் புதுமொழி. '‘மன்னன் எவ்வழி மன்னுயிர் அவ்வழி,’ என்பது அன்றய பழமொழி. இன்று நாமே நாடாளும் மன்னர் என்றார்