பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

மனிதன் எங்கே செல்கிறான்?


வாழ்வினை மட்டும் தான் பாதிக்கும். ஆனால், கற்றறி மூடன், தன் அறிவின் மதிப்பை அதிகமாகக் கணக்கிட்டு ஆற்றும் கொடுமையினாலே அவனியே அல்லல் உறுவதைக் காண்கின்றோம். தமிழ் நாட்டில் மட்டுமனறிப் பிற நாடுகளிலும் இத்தகைய கற்றறி மூடர்கள் (Educated fools) உள்ளனர். அவர்களால் நாடும் உலகமும் அல்லல் உறுகின்றன. இவற்றை எல்லாம் எண்ணித்தான் போலும் சமரச ஞானியாகிய தாயுமானவர் ‘கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள், கற்று மறிவில்லாத என் கன்மத்தை என் சொல்லுகேன்!’ என்று வருந்திப் பாடுகின்றார்! எனவே, கல்வியாலே தான் அறிவு நிரம்புகின்றது என்பது சரியன்று.

பின் அறிவு என்பது தான் என்ன? அனைத்தையும் விளக்க வந்த வள்ளுவர் அறிவைப் பற்றியும் கூறத் தவறவில்லை. மனிதன் மனிதனாக வாழ வழி காட்டுவதே உண்மையில் அறிவாகும். அறிவைப் பலவாறு பகுத்துக் காண்கின்றார் அவர். நூல் அறிவு ஒரு பகுதிதான். ஆனால் அதுவே முடிந்த அறிவன்று. உலக அறிவு மற்றொன்று, நாலறிவு மட்டும் பெற்று, உலக அறிவு இல்லாதிருப்பின் அதனால் பயனில்லை என்பதை வள்ளுவர் ‘உலகத் தொடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார், அறிவிலாதார்,’ என்று விளக்குகின்றார். கல்வி கற்றும், ‘எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு,’ என்ற உண்மையை உணராது, உலகம் வாழினும் வீழினும், வாடினும் சாவினும், கவலையற்றுத் தாந்தோன்றிக் தம்பிரான்களாய்த் திரிவோர், கற்றும் அறிவில்லாதவரே என்பதைத் திட்டமாகக் கூறுகின்றார். எனவே, நூலறிவினும் மேம்பட்ட அறிவு உண்டு என்பது தேற்றம். அந்த மேலான மெய்யறிவுக்கு, வழிகாட்டிகளாகவும் கீழ்ப்படிகளாவும் அமைவனவே நூலறிவும் உலகறிவும். இந்த உண்மையை உணராது, கல்வி அகங்காரமும், பிற