பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

மனிதன் எங்கே செல்கிறான்?


‘மக்கள் தாமே ஆறறி வுயிரே.’
‘மாவும் மாக்களும் ஐயறி வினவே,

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’

என்று பாகுபடுத்திக் காட்டும் திறன் பாராட்டற்குரியதன்றோ ? நலங்கேடுகளை ஆராய்ந்து‘ நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை,’ என்ற மெய்யறிவால் வாழ்பவனை மக்கள் இனத்தவன் என்றும், அஃதற்ற மனித உடலோடு காட்சியளிப்பவனை விலங்கினத்தவனென்றும் பிரித்துக் காட்டித் தொல்காப்பியர் உண்மை அறிவு எது என்பதை ஒரு வகையால் விளக்கிவிட்டார்.

ஆம்! உலகில் மனிதராய்ப் பிறந்தார் மக்களாய் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்வதற்குப் பல பேரறிஞர்கள் வழி காட்டியுள்ளார்கள். நம் திருவள்ளுவரே அறிவினுள் எல்லாம் தலையாய அறிவை நமக்குக் காட்டத் தவறவில்லை. மேலே கண்டபடி, அறிவைப் பல கூறுகளாக நுனித்தறிந்த அவ்வள்ளுவர், மேலாய அறிவினை வாய்விட்டுப் பேசி விளக்குகின்றார். ‘அறிவினுள் எல்லாம் தலை என்ப, தீய செறுவார்க்கும் செய்யா விடல்,’ என்ற அவர் வாக்கு மெய்யறிவை நமக்குக் காட்டுகின்றது. நூலறிவும், உலக அறிவும், பிற எல்லா அறிவுகளும் இந்த மெய்யறிவுக்கு மனிதனை அழைத்துச் சென்றால்தான் அவன் உண்மையில் மனிதனாக வாழ முடியும் ; அன்றேல், விலங்கினும் கீழாகத் தள்ளப்படுவான் என்பது உறுதி.

இன்று உலகில் எத்தனையோ கோணங்களில் பகை வளர்ந்து வருகின்றது. தனி மனிதனுக்குள் பகை வளர்ந்துள்ளதை நாட்டிலும் உலகிலும் வளர்ந்துள்ள நீதி மன்றங்களின் எண்ணிக்கை எடுத்துக் காட்டுகின்றது. சிறுசிறு பொருளுக்கெல்லாம் பெருஞ்சண்டையிட்டு, நீதி மன்றம் ஏறி, உள்ள பொருளையும் கொள்ளை கொடுக்கும் வழக்கத்தை நாம் அறியோமா ? எத்தனை எத்தனை