பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

மனிதன் எங்கே செல்கிறான்?


தமிழ் நாட்டுக் கோயில்களெல்லாம் எல்லாருக்கும் திறந்து விடப்பட்டன. அன்பாலன்று: அரசியலார் தம் சட்டத்தால். அச்சட்டம் கண்டு சழக்கர் வாய் மூடினர். வைதிகம் வாட்டம் அடைந்தது; அனைத்துக் கோயில் களும் அரிசனங்களுக்கு–தீண்டப்படாதார் என்பாருக்கு–திறந்து விடப்பட்டன. கோயில்கள் திறந்துவிடப்பட்டனவே ஒழிய, மக்கள் உள்ளங்கள் திறக்கப்பட்டனவா என்பது சற்று ஆராய வேண்டுவது ஒன்று. கோயில் திறக்கப்பட்டதால் ஏழை மக்களுக்கு உண்டாவது ஏற்றமா அன்றி ஏமாற்றமா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ‘இறைவனைக் காணச் சேரவாரும் செகத்திரே,’ என்று திரு. சிவசண்முகமோ அன்றி வேறு யாரோ கூப்பிட்டு ஒரு நல்ல நாளில் அனைவரையும் உள்ளே அழைத்து வந்து கூட்டம் போட்டதாலே கோயில் நுழைவு ஆகிவிட்டதாக முடிவு செய்யப் பெறுமா? அன்று தலைவர்களுடன் கோயிலுக்குள் சென்ற ஊர்ப் பண்ணையாள் மறுநாள் பண்ணைக்காரரிடம் பெறுவது என்ன? கோயிலுக்குச் சென்ற காரணத்தால் சில ரூபாய் அபராதம், அல்லது அவன் பயிரிட்டிருந்த நிலத்தை இழத்தல். இது நாடெங்கும் காணப்படும் நிகழ்ச்சி. அரசியலாரும் அவ்வாறு சட்டம். செய்ய, ஊரிலுள்ள மிராசுதார்களும் பத்திரிகையில் தங்கள் படம் வரும், அல்லது பெரியவர்களால்–சிவசண்முகத்தின் சிபாரிசால் – ஒரு பதவி அல்லது வியாபாரம் வரும் என எண்ணிக் கதவைத் திறந்து பூட்டிவைத்தலால் ஏழை மகன் வாட்டம் நீங்கான். எண்ணம் வேண்டும். உள்ளத்தே எண்ணுமாறு வேண்டுகிறேன். ஏழைக்கு ஏற்றத்தை எண்ணுங்கள். அதற்கு உங்கள் உள்ளங்கள் திறக்கப்பட வேண்டும். திறக்குமா? சற்றே சிந்தித்துப் பாருங்கள்.