பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுவா முன்னேற்றம்?

71


முன்னேறிவிட்டான் ! இவ்வாறு அன்றைய நிலையைக் காட்டிலும் இன்றைய மனிதன் எத்தனையோ வகையில் முன்னேறிவிட்டான் என்பதை வரிசையாகப் பலபடச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், உண்மையில் அவன் முன்னேறியதுண்டா? வழுக்கி வீழ்ந்தவன் தானே இன்றைய மனிதன் ? மேலும், இவ்வாறு பல துறையிலும் முன்னேறிய மனிதன் அடகு வைக்கும் அடிமை வாழ்வில் மட்டும் இன்னும் அரிச்சந்திரன் வாழ்ந்த அந்த நாளிலிருந்து ஒரு சிறிதும் முன்னேறவில்லை என்பது கண்கூடு. நாள் இதழ்ச் செய்தி அதை உறுதிப்படுத்துகிறது.

நாட்டில் வாழ்கின்ற மனிதன் காட்டில் வாழும் விலங்குகளினும் மேலானவன் என்கின்றார்கள். ஆனால், நாட்டு நிகழ்ச்சிகள் உண்மையில் மனிதன் மிருகமாகி வருவதைக் காட்டுகின்றன. வன விலங்குகள் ஒன்றையொன்று பகைக்கும் ; ஒன்றை யொன்று கொல்லும். மனிதனோ, மிகக்கொடிய ஆயுதங்களால்—அணுக்குண்டு முதலியவற்றால்—நல்லவர் அல்லவர் எல்லோரையும் ஒரு சேரக் கொன்று கூத்தாடுவான். வன விலங்குகளில் கொடிய சிங்கம் தனக்குப் பசி எடுத்தாலன்றிப் பிற உயிர்களை வருத்தாது என்று சொல்வார்கள். கரடியோ, இறந்தவரைத் தீண்டாது என்பார்கள். இவைகள் உண்மையாயின், மனிதன் இக்காட்டு மிருகங்களினும் கொடியவனாவன். தான் மகிழ வேண்டும் என்பதற்காகவே மற்றவர்களுக்கு மட்டற்ற துன்பம் இழைப்பதும், கெட்டவரை மேலும் அடுத்துக் கெடுப்பதும் வழக்கமாக நாட்டில் நிகழ்கின்றன அல்லவா? ஆம்! இந்த நிலையில் மனிதன் எந்த வகையில் மிருகத்தினும் முன்னேறிவிட்டான்? இது நிற்க,

நாள் இதழ்ச் செய்தி நம் உள்ளத்தைத் தொட்டது என்று கூறினேன். அச்செய்தியைப் பலரும் படித்-