பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியார் வந்தால்

81



சிந்தி, உயிரையே தியாகம் செய்து, காந்தியடிகள் முதல் பலர் பாடு பட்டுப் பெற்ற சுதந்திர நாட்டில் இன்று இந்த நிலை இருப்பதைக் கண்டால்-இறந்த பாரதியார் எழுந்துவந்து கண்டால்-என்ன நினைப்பார்? 'செப்டெம்பர் பதினோராம் நாளில் தமிழ் நாடெங்கும் பாரதியாரின் பாட்டு முழங்கும். அவரைப் பற்றிய பேச்சு விண்ணை முட்டும். இவற்றைக் கேட்டால் பாரதியார் ஒரு வேளை சொக்கிப் போவார்!' என்று நினைக்கக் கூடும். ஆனால், பாரதியார் அவ்வளவு ஏமாளியல்லர். வெளி நாட்டார் யாராவது நம்மைக் காண வந்தால், அவர்களை உல்லாசப் பவனியால் ஊக்கி, உப்பரிகைகளில் இருத்தி கான இசைகளையும் கலைக் காட்சிகளையும் கேட்கவும் காணவும் செய்து, நகரசபை மண்டபத்து நல்வரவேற்பளித்ததைக் கொண்டே, வந்தவர்கள், 'இந்தச் சென்னையைப் போன்ற சிறந்த நகரம் இல்லை!' என்று புகழ்ந்து போவார்கள்! அவர்கள் அறிவார்களா, பஸ் நிற்குமிடந்தோறும் பட்டினிப் பட்டாளப் படையெடுப்பையும். தெருக்களில் சமைத்துத் தின்னும் சீரழிந்த கூட்டத்தையும், கொசுக்கள் கூடிக்கொல்லும் ஏழைகள் வாழிடங்களையும்! ஆனால், பாரதியார் அத்தகைய ஏமாளிகள் கூட்டத்தில் ஒருவராக வைத்து எண்ணப்படமாட்டார்; அவர் அறிவார் உண்மையை-அமரத்துவம் பெற்ற காரணத்தால்.

'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று எக்களித்துப் பாடினார் அவர். ஆனால், இன்று அத்தமிழ் மொழியில் மாசு சூழ்ந்துள்ளதை அறிந்தால், என்னாவார் அவர்!'கூறத்தகாதவன் கூறினான்' என்று அவரே கூறியபடி, தமிழ் மகனாய்ப் பிறந்தவனே இன்று தமிழுக்குக் கேடு சூழ்கின்றான் ; தமிழை வளர்ப்பதாகக் கூறிக்கொண்டே தனிப்பட்டோரும் கழகங்களும் தமிழ்க் கொலைப்பணியில்