பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

மனிதன் எங்கே செல்கிறான்?



தலை சிறந்திருப்பதை நினைத்தால், தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்கள் கூறிய

'தமிழினைப்போல் இனிமை மொழி சாற்றுதற்கும் இல்லை' இந்நாள்

தமிழரைப்போல் மொழிக்கொலையில் தலை சிறந்தோர் எவர்
உளரே?

என்ற அடிகள் தாம் நினைவுக்கு வருகின்றன. 'புத்தம் புதிய கலைகளைச் சொல்லும் திறமை தமிழ் மொழிக்கு இல்லை,' என்று கயவன் கூறியதாகக் குறிக்கிறார் பாரதியார், அந்தக் கொடுமையையும் தாண்டி, நல்ல வழக்கத்திலுள்ள 'ஆறு' என்ற தமிழ்ச் சொல்லிருக்க, 'நதி' என்ற சொல்லைத்தான் நிலநூலில் - அவர்கள் வாக்குப்படி பூகோள சாஸ்திரத்தில்-உபயோகிக்க வேண்டும் என்ற சட்டம் இடும் அளவிற்குத் தமிழ்க்கொலை நடப்பதை அவர் அறியின், அந்தோ! அந்தக் கொலையாளர் வேறு தமிழ் ஆராய்ச்சியாளரும் ஆகிவிட்டால்...... அப்புறம் தமிழுக்கு வாழ்வு ஏது? ஆம். இன்றைய வேகத்தில் தமிழ்மொழிக் கொலை தொடர்ந்து நடைபெறின் - எழுத்தும் சொல்லும் பொருளும் அனைத்தும் தமிழ் அறிஞர்களாலேயே சிதைக்கப்பெறின்- கி. பி. 2000 என்ற ஆண்டு வரும் போது, 'இந்திய நிலப்பரப்பின் தென் கோடியிலே பல ஆண்டுகளுக்கு முன்னே தமிழ் என்ற ஒரு மொழி வழக்கில் இருந்ததாம்,' என்று வேறொரு மொழியில் வரலாற்று நூலில் படிக்கும் அளவுக்குத்தான் தமிழ் வளரும். அந்தோ! பாரதியார் இன்று வந்து இந்நிலையினைக் கண்டால் என்னாவார்? ஒரு புறம் இலக்கியங்கள் வேண்டா என்ற கொலையும், மற்றொரு புறம் எழுத்துச் சிதைக்கும் கொலையும், பிற கொலைகளும் நடப்பதைக் கண்டு, 'தமிழ் நாடு தாய்க்கொலைக்குப் பேர் போனதாயிற்றே, என்று தானே வருந்துவார்?