பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியார் வந்தால்

83



மொழி கிடக்க, சமுதாயந்தான் என்ன முன்னேற்றத்தைக் கண்டுவிட்டது! 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம்!' என்று கதறினார் பாரதியார். இன்று சுதந்தரம் பெற்ற பின்னும் அந்த நிலை நீங்கிய பாடு இல்லையே! பட்டினிப் பட்டாளம் பெருகிக்கொண்டு தானே வருகிறது? சென்னை நகரில் ஒரு சிறந்த செல்வர் வீட்டு நாய்க்கு ஒரு நாளைக்குச் செலவாகும் தொகை கூட ஓர் ஏழைக்குத் திங்கள் ஒன்றுக்குக் கிடையாதே! இதைப் புள்ளி விவரத்தோடு வேண்டுமானாலும், யாருமே சேகரிக்கலாம். இப்படி மனிதன் மிருகத்தினும் கேடாக மதிக்கப்பட்ட வாழ்க்கையைக் கண்ணாரக் கண்டும், அதைத் தீர்க்க எந்த அரசியல் கட்சியும் முன்னுக்கு வாராத நாட்டைக் காட்டிலும் 'கடும்புலி வாழும் காடு நன்றே' என்பது உண்மையிலும் உண்மை அன்றோ? மேடைப் பேச்சும் ஏட்டுக் கணக்கும் உண்மையில் நாட்டு வாழ்க்கையில்-நல்ல வழியில்-என்று செயலில் வருகின்றனவோ அன்றைக்குத்தானே உலகம் சீர்படும்? அதற்கு முன் பாரதியார் வந்தால் வம்புதானே! அவர் அன்று எழுதியபடி இன்று சகத்தினையே அழித்தாலும் அழித்துவிடுவாரே! இப்படி ஒரு புறம் ஏழைகள் வாடவும், மற்றொரு புறம் விலங்குகளும் விலாப்புடைத்துண்டு பஞ்சணையில் உறங்கவும் காணும் உலகம் இருப்பதைக் காட்டிலும் அது அழிந்து ஒழிவதும் நல்லது தானே? 'பகைவனுக் கருள்வாய் நன்னெஞ்சே', என்று உளம் கனிந்து பாடுகிறார் பாரதியார். ஆனால், இன்றோ, நண்பனையும் உள்ளத்தே பகைவனாக நினைக்கும் பான்மையில் மனித சமுதாயம் சென்றுகொண்டே இருக்கிறதே! உதட்டில் உறவும் உள்ளத்தில் பகையும் கொண்டு ஒருவனுக்கு மற்றவன் பள்ளம் தோண்டும் முறையில் சமுதாயம் சென்றுகொண்டிருப்பதை அறியா-