பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் ஊழியர்

93



தால் அந்நாட்டு மக்களும் நல்வாழ்வு பெறுவர், பழங் காலத்தே மன்னர்கள் நாடாண்டனர். அவர்கள் தம் கீழ் உள்ள குடிகளை உயிராகவும் உடலாகவும் போற்றிப் புரந்தனர். புறநானூற்றுப் பாடல் ஒன்று 'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' என்று கூறுகின்றது. இதன்படி உலகெலாம்-உலக மக்களெல்லாம்-உடலாகவும், மன்னன் உயிராகவும் இருந்து ஒன்றி வாழ்ந்தமை பெறப்படுகிறது. கம்பர் அயோத்தி மன்னனைக் கூறும் போது அவனை உடலாகவும் மக்களை உயிராகவும் காட்டுகின்றார். 'உயிரெலாம் உறையுமோர் உடம்பும் ஆயினான்,' என்று தசரதனைக் காட்டுகிறார். எப்படித் தம் உயிருக்கும் உடம்புக்கும் பிரிக்க முடியாத பெருந்தொடர்பு உள்ளதோ, அப்படியே ஆள்வோருக்கும் ஆளப்படுவோருக்கும் தொடர்பு அமைய வேண்டுமென்பது நல்லவர் கருத்தென்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இன்று உலகில் மன்னர் நிலை மறைந்தது; மக்கள் ஆட்சி எங்கும் மலர்கின்றது. இருக்கின்ற ஒரு சில மன்னர்கள்கூட, மக்கள் மன்றத்திற்கு இடம் கொடுத்து ஒதுங்கி வாழும் வாழ்வையே விரும்புகின்றனர். எனவே, மக்களாட்சியால் பல நாடுகள் இன்று ஆளப்படுகின்றன. நாட்டில் செல்வாக்குப் பெற்றவர் தம் கட்சியே ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து நாட்டை ஆளுகின்றது. எனவே முன் கூறிய அந்த உடம்போடு உயிர் கூடி நின்ற பண்பாடு இத்த நாடாளும் நல்லவர்கட்கும் மக்களுக்கும் பொருத்தமாக அமைய வேண்டும். அந்த அமைப்பை நிலை கெடாது பாதுகாக்க வேண்டியவர்கள்-உறவை வளர்க்க வேண்டியவர்கள்-ஆள்வோருக்கும் ஆளப்படுவோருக்கும் இடையில் இருக்கும் சாதாரண உத்தியோகத்தர்களேயாவர்.