பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்க்க நேர்ந்தால் என்ன? அவள் எனக்காக எந்த வகையிலும் பயப்படவேண்டியதில்லை - ஏனெனில், இனி நான் இருக்க மாட்டேன்; இனி நான் இந்த உலகத்தில் இருக்கவே மாட்டேன்!

போதாதா, இந்த உலகத்தில் நான் இருந்ததெல்லாம் போதாதா? இருந்து அனுபவித்ததெல்லாம் போதாதா? - போதும்; ஏழேழு ஜன்மங்களுக்குப் போதும்!

சிரிப்பு வருகிறது,ஆம் எனக்குக்கூடச் சிரிப்பு வருகிறது - ஏன், என்னைப் பார்த்து ஊரார் சிரிப்பது போதாது போலிருக்கிறது; அதனால்தான் என்னைப் பார்த்து நானே சிரித்துக் கொள்கிறேனோ, என்னமோ?

இருக்கட்டும்; என்னைப் பொறுத்தவரை நான் சாகப்போவது சரி! - அன்றொரு நாள் உணர்ச்சிக்கு இரையானேன்; அந்த உணர்ச்சி இன்று என் உயிரைத் தனக்கு இரையாகக் கேட்கிறது; கொடுக்கப் போகிறேன் - இது சரியே; யார் என்ன சொன்னாலும் என்னைப் பொறுத்தவரை இது சரியே!

ஆனால்...

இந்தக் குழந்தை யாரை என்ன செய்தது? இதை நான் கொன்றுவிட வேண்டுமாமே?

அதுவும் எப்படி? இதன் கழுத்தைப் பிடித்துத் திருகி...

ஐயையோ மனிதர்களா இவர்கள்? மாறிவிட்ட மனிதர்களா, இவர்கள்? - இல்லை இவர்கள் மாறவேயில்லை!

வானம் மாறிவிட்டது என்கிறது விஞ்ஞானம்; வான் மதியும் மீன்களும் மாறிவிட்டன. மாறிக்கொண்டே