பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 விந்தன்

ஏழ்மையின் காரணமாக இரண்டாந்தாரமாய் வாழ்க்கைப்பட்டுவிட்ட அவளுக்கு, வேறு யாருக்காவது தான் முதல் மனைவியாக வாய்க்காமல் போய்விட்டோமே என்ற ஏக்கம், வெறுப்பு. அந்த ஏக்கத்தையும் வெறுப்பையும் அவள் ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும் காட்டி வந்தாள். அவ்வாறு காட்டுவதற்கு ஆதாரமாக இருந்தவர்கள் யார் என்கிறீர்களா? - நானும் என் அண்ணாவும்தான்!

அப்பா சர்வ வல்லமையுள்ள கணவராயிருந்தாலும் அவருடைய வல்லமை அவளிடம் செல்லவில்லை - எப்படிச் செல்லும்? எடுத்ததற்கெல்லாம் தாலியைக் கழற்றி வீசி எறிந்துவிட்டு அவள் அவருக்கு ‘குட் பை போட்டு விட்டுச் செல்லத் தயாராயிருக்கும்போது?

இந்த அளவுக்கு அவள் துணிந்திருந்ததற்குக் காரணம் வேறொன்றுமில்லை: இளமையிலிருந்தே தன் கையைக் கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் அவளுடைய உற்றார் உறவினர் அவளை விட்டு வைத்திருந்ததுதான்!

அன்று தன்னைக் காப்பாற்ற யாரும் தேவைப்படாமல் இருந்தபோது, இன்றுமட்டும் என்ன தேவையாம்?

இத்தகைய அலட்சியத்துக் குள்ளாகியிருந்த அவளை, அனுதாபத்தோடுக் கல்யாணம் செய்துக் கொண்டதாக என் அப்பா சொல்லப் போக, நானும் உங்களை அனுதாபத்தோடுதான் கல்யாணம் செய்து கொண்டே னாக்கும்?’ என்று அவளும் சொல்ல ஆரம்பித்து விட்டாள்

கணவன் அப்படி ஒருவன் இருந்துதான் தீரவேண்டு மென்றால் அவன் தனக்கு அடங்கியிருக்கட்டும்;