பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி


புரியும்படி சொன்னால் தானே, என்னாலும் மேற்கொண்டு ஏதாவது யோசித்துப் பதில் சொல்ல முடியும். மனதிற்குள்ளே வைத்து மருகிக் கொண்டால், புதிரானது விடுபட்டுப் போகின்ற மார்க்கம் எப்படி கிடைக்கும்?

திருமணத்தைப் பற்றியும், பெண்களைப்பற்றியும், அவர்களோடு வாழ்வது பற்றியும் பயங்கரமான புதிர்களை என் நண்பர்கள் அவிழ்த்து விட்டிருக்கிறார்களே! அந்த சந்தேகங்கள் எல்லாவற்றையும் நீங்கள் நீக்கினால்தானே என்னாலும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ள முடியும். மேற்கொண்டு என்னாலும் யோசிக்க முடியும் என்றான் வாசு.

என்னால் முடிந்தவரை உன் சந்தேகங்களைப் போக்க முயற்சிக்கிறேன். என் வாழ்க்கையில் பெற்ற அனுபவம், பிறர் வாயிலாகக் கேட்ட அனுபவம், என் வாழ்க்கையில் பல புத்தகங்களைப் படித்துப்பெற்ற என் அறிவு எல்லாம் உன் சந்தேகங்களைத் தீர்க்கக் கூடியனவாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லாது போனாலும், உனக்குத் திருப்தி ஏற்படுகின்ற வகையில் திறமையாக தெளிவாக விளக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. என்ன என்று நீ சொல்லேன் கேட்கலாம் என்று உலகநாதர் ஒரு புன்சிரிப்புடன் பிரச்சினையை ஆரம்பித்து வைத்தார்.

நானும் எத்தனையோ பேர்களைக் கேட்டிருக்கிறேன். அவர்களிடமிருந்து சரியான விவரமும் விளக்கமும் எனக்கு கிடைக்கவேயில்லை. அவர்களால் மேலும் எனக்குக் குழப்பமும் கவலையும் அதிகமானதே தவிர, குறையவேயில்லை, அதனால் தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன்.