பக்கம்:மன ஊஞ்சல்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 மன ஊஞ்சல் வண்டி நின்றவுடனே, அண்ணாமலைப் பண்டிதர் கீழே இறங்கினார். அவர் கீழே இறங்குவதற்குமுன் ஒரு வேலைக் காரன் ஓடிவந்து மாட்டுக்கயிற்றைப் பிடித்துக்கொண்டு "ஐயா! இறங்குங்கள்!” என்று கூறி நிமிர்ந்தவன், 'ஆ' என்று வியப்புக்குரல் எழுப்பினான். பிறகு அவன் மிகவும் தாழ்ந்த குரலில், 'அம்மா இறங்குங்க' என்று கூறினான். தங்கம் வண்டியிலிருந்து இறங்குவதற்கு முன்னாலே, மாளிகையின் உட்புறத்திலிருந்து வெளிப்பட்ட ஒரு கிழவர், "பண்டிதரே! வந்துவிட்டீர்களா? ஆ! இந்தப் பெண்ணு தானா தங்கம்! தங்க விக்கிரகம்போல யிருக்காளே!” என்று கேட்டுக்கொண்டே வந்தார். அவருடைய மேனி மினுக்கும், குரலின் கம்பீரமும், நெடிய உருவமும் பார்க்கும்போதே அவர் உயர்குடிப் பிறந்த செல்வமும் செல்வாக்குமாக வாழ்ந்த ஒரு மனிதர் என்பதை எடுத்துக் காட்டுவனவாக இருந்தன. பஞ்சக் சச்சம் வைத்துக் கட்டிய துல்லியமான வெள்ளை நிறமுள்ள தங்கச் சரிகை வேட்டியும், தோளில், சலவை கலையாதபடி மடித்துப் போட்டிருந்த துண்டும், இடையில் தடியாகவும், கழுத்தில் சன்னமாகவும் அழகிய கோவை வேலைப்பாட்டுடன் கூடிய தங்கச்சங்கிலிகளும், அந்தக் கழுத்துச் சங்கிலியில், நட்டநடுவில் வைரமும் அதைச் சுற்றிலும் நவரத்தினங்களும் பதித்துச் செய்யப்பட்டிருந்த மயில் உருவமுடைய பதக்கமும், கையில் கட்டியிருந்த வைரத் தடையமும், கழுத்தில் குறுகிய வட்டமுள்ளதாகப் போட்டிருந்த தங்கப்பூண்களுடன் கூடிய உருத்திராக்க மாலையும், அவர்தம் பழுத்த மேனியிற் பூசியிருந்த சந்தனமும், நெற்றியில் தீட்டியிருந்த மூன்று வரிகளாலாகிய திருநீற்றுப்பட்டையும் கண்ட தங்கம், அவர்தான் கதவிப் பட்டணம் ஜமீந்தாராக இருக்க வேண்டும் என்று யூகித்துக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/172&oldid=854282" இலிருந்து மீள்விக்கப்பட்டது