பக்கம்:மன ஊஞ்சல்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I82 மன ஊஞ்சல் ஒசையை அவள் முதன்முதலில் கவனிக்க நேர்ந்தபோது, திடுக்கிட்டாள். பிறகு நெஞ்சைப் பிடித்துக்கொண்டு ஊன்றிக் கவனித்தாள். யாரோ வீட்டுக்குள்ளே இருட்டில் மெதுவாக நடந்து செல்வதுபோன்ற ஓசை கேட்டது. தட்டுத் தடுமாறி அந்தக் காலடிகள் நடப்பதுபோலவும்.அதே சமயம், ஒசைப்படாமல் செல்ல முயல்வதுபோலவும் இருந்தது. சிறிது நேரத்திற்குப் பின் அந்தக் காலடி மாடிப் படியில் ஏறிச் செல்வதுபோல் தோன்றியது. மாடிப்படியில் ஏறிய அந்தக் காலடியோசை சிறிதுநேரம் வரை நின்றிருந்தது போலவும், திரும்பவும் இறங்கியதுபோலவும் இருந்தது. பின்னர் அது தெருக் கதவை நோக்கிச் சென்றதுபோலவும் இருந்தது. பயந்து துடித்து அடித்துக்கொண்டிருக்கும் நெஞ்சை ஒற்றைக் கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டு சன்னல் அருகே மெல்ல நகர்ந்து சென்றாள் தங்கம், மெல்ல எட்டி வாசற் பக்கம் நோக்கினாள். அவர்கள் வீட்டு வாசற் படி யிலிருந்து ஒருருவம் வீதியை நோக்கி நகர்ந்து சென்றுகொண் டிருந்தது. மெல்ல மெல்ல நகர்ந்த அந்த உருவம், வீதியை அடைந்ததும் வேகமாக நடந்தது. அந்த உருவத்தைக் கூர்ந்து நோக்கியபோது அது ஒர் இளைஞனுடைய உருவ மாக இருந்தது. இப்போது வீட்டிற்கு வந்து போனது யார்-எதற்காக இந்த நள்ளிரவில் தன் வீட்டிற்குள் வர வேண்டும். அது மேலே ஏன் சென்றது. அண்ணாமலைப் பண்டிதரை அது சந்திக்கச் சென்றதா? அப்படியானால், அவருடைய அறைக் கதவு தட்டப்படும் சத்தமோ, அல்லது பேச்சுக் குரலோ ஏன் ஏற்படவில்லை. வந்த அந்த உருவம் உடனடியாக ஏன் திரும்பி விட்டது. அதற்கு யார் கதவு திறந்து விட்டார்கள்? என்பது போன்ற சந்தேகங்கள் அவள் உள்ளத்தைக் குடைந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/192&oldid=854304" இலிருந்து மீள்விக்கப்பட்டது