பக்கம்:மன ஊஞ்சல்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 மன ஊஞ்சல் "அப்படிச் சொன்னால், மாலையில் காப்பி மட்டும் சாப்பிட்டுவிட்டு வரலாம். இப்போது நாம் சாப்பிட்டு விட்டுப் போவது தான் நல்லது' என்று மரகத அம்மாள் திரும்பவும் கூறினாள். தங்கம் ஒருத்திதான் ஜமீந்தார் வீட்டுக்கு அறிமுக மானவள். ஆகவே ராதாவும் சாப்பாட்டுக்குப் பிறகு அங்கு போவது தான் நல்லதென்று எண்ணினாள். ஆகவே, அவர்கள் சாப்பாட்டுக் கடையில் நுழைந்து பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதிக்குள் சென்று சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தார்கள். சாப்பிட்டுவிட்டு வெயிலில் நடப்பது துன்பமாயிருந்தது. இருந்தாலும் "இதோ வந்துவிட்டது! அதோ வந்துவிட்டது! என்று சொல்லிக் கொண்டே வீதிகளைக் கடந்து கடைசியில் ஜமீந்தார் வீட்டு மாளிகையை அடைந்தார்கள். அங்கே போய்ச் சேர்ந்ததும் தங்கத்திற்கு யாரோ அவள் இதயத்தில் சம்மட்டி கொண்டு அடிப்பது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. மரகத அம்மாளும் திகைப்படைந்து போனாள். ராதாவால் பேசவே முடியவில்லை, ஜமீந்தார் வீட்டு காம்பவுண்டு வாசல் கம்பிக் கதவு இழுத்துப் பூட்டப்பட்டுக் கிடந்தது. உள்ளே எட்டிப் பார்த்த போது மாளிகை முன் கதவும் சாத்தப்பட்டிருந்தது. உள்ளே ஆள் நடமாட்டமே தென்படவில்லை. மூன்று பெண்களும் மூச்சுப்பேச்சில்லாமல் திகைப்புடன் அதைப் பார்த்துப் பிரமித்துப் போய் நின்று கொண்டிருந்தார்கள், அவர்கள் திகைப்படங்க அதிக நேரம் பிடித்தது. பிரமித்துப்போய் நின்று கொண்டிருந்த அவர்கள் யாரோ ஒரு கிழவனுடைய குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/202&oldid=854315" இலிருந்து மீள்விக்கப்பட்டது